Last Updated : 20 Mar, 2017 10:03 AM

 

Published : 20 Mar 2017 10:03 AM
Last Updated : 20 Mar 2017 10:03 AM

முகநூல் நண்பர்கள் உதவியுடன்கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்: பாஸ்போர்ட் அதிகாரியின் சேவைக்கு வரவேற்பு

முகநூல் நண்பர்கள் உதவியுடன் பழைய, புதிய கம்ப்யூட்டர்களை பெற்று, கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யும் பாஸ்போர்ட் அதிகாரியின் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பாலமுருகன். தற்போது ஓராண்டு விடுமுறையில் லண்டன் சென்று, ஆளுகை மற்றும் பொதுக்கொள்கை மேற்படிப்பு படித்து வருகிறார். இவரது ஏற்பாட்டின்பேரில், இவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குக்கிராமமான சிறுவத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு என்எல்சி நிர்வாகம் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.

தற்போது இங்கிலாந்தில் இருந்தபோதும், அங்கிருந்தபடியே, தனது சொந்த ஊரில் உள்ள இளைஞர்களின் உதவியுடன் தனது சேவையை தொடர்ந்து வருகிறார். அங்கு உள்ள பள்ளியில் கம்ப்யூட்டர் வசதி இல்லாததை அறிந்த அவர், உதவும் மனம் படைத்தவர்கள், தங்களது பழைய கம்ப்யூட்டர்களை இப்பள்ளிக்கு தந்து உதவலாம் என தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த சாம் பால் என்பவர் 10 புதிய கம்ப்யூட்டர்களையும், மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் 6 புதிய கம்ப்யூட்டர்களையும், மற்றொருவர் ஒரு கம்ப்யூட்டரையும் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, மேலும் பலர் பழைய, புதிய கம்ப்யூட்டர்களை வழங்க முன்வந்துள்ளதால், தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத அரசுப் பள்ளிகளுக்கும் அவற்றை வழங்க திட்டமிட்டுள்ளார்.

பாலமுருகன்

இதுகுறித்து, லண்டனில் உள்ள பாலமுருகன், கூறியதாவது: இன்றைய உலகில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரைப் பற்றிய அறிவு அவசியமாகிறது. ஆனால், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாத நிலை உள்ளது. இ-கவர்னன்ஸ், மொபைல் கவர்னன்ஸ், டிஜிட்டல் செயல்பாடுகள் என நாம் பேசி வரும் நிலையில், மாணவர்கள் கம்ப்யூட்டரைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

என் சொந்த ஊரான சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் வசதி இல்லை என தெரிந்தவுடன், முகநூலில் இதற்கென ‘Computer Beggar’ என்ற பெயரில் கணக்கு தொடங்கி, உதவும் மனம் படைத்தவர்கள், தங்களிடம் உள்ள பழைய கம்ப்யூட்டர்களை, எங்கள் பள்ளிக்கு தந்து உதவலாம் என கேட்டுக்கொண்டேன். அதன்படி, தொடர்புகொண்ட முகநூல் நண்பர்கள் புதிதாகவே கம்ப்யூட்டர்களை வழங்கினர். அவை சிறுவத்தூரில் உள்ள இளைஞர்கள் மூலம் பெறப்பட்டு, பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், பலர் கம்ப்யூட்டர்களை வழங்க முன்வந்துள்ளதால், சிறுவத்தூரைச் சுற்றியுள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கும், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கும் இவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் வழங்க விருப்பமா?

கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு பழைய, புதிய கம்ப்யூட்டர்களை வழங்க விரும்புபவர்கள் சிறுவத்தூரைச் சேர்ந்த தனசெழியனை (90439 71234) தொடர்புகொள்ளலாம். தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அங்கு உள்ள என் நண்பர்கள் அவற்றைப் பெற்று, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், அருகில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கிராம மக்களுக்காக மையம்

பாலமுருகனின் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள சிறுவத்தூரைச் சேர்ந்த தனசெழியன் கூறும்போது, “இதுவரை 17 கம்ப்யூட்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதில், எங்கள் ஊர் பள்ளியின் தேவைக்கு உள்ளவை போக, மீதமுள்ள கம்ப்யூட்டர்களைக்கொண்டு, பயிற்சி மையம் அமைத்து, கிராம மக்களுக்குத் தேவையான ஆதார், சிட்டா அடங்கல் பெறுதல் போன்ற உதவிகள் செய்து தரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x