Published : 28 Nov 2013 09:15 AM
Last Updated : 28 Nov 2013 09:15 AM

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு விரைவில் சீராகும்: மின்வாரிய அதிகாரிகள்

தமிழகத்தில் மின்வெட்டு நிலைமை விரைவில் சீராகும் என்றும் தன் தேவையை தானே நிறைவேற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் மின்வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள்.

திமுக ஆட்சியில் இருந்த படுமோசமான நிலை இந்த ஆட்சியில் வராது என்றும், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் ஏற்பட்டு வந்த சுமார் ரூ. 20,000 கோடி நஷ்டம் இப்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் தனியார் மின் நிறுவனத்திடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி இன்னும் ஓரிரு மாதங்களில் 1500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைத்துவிடும். அப்போது தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பு இருக்காது என்றும் கூறுகின்றனர்.

உபரி மின்சாரம் 600 மெகாவாட்

இது குறித்து மின்பொறியாளர்கள் சிலர் கூறியது:

மேட்டூரில் 600 மெகாவாட் மின்சாரம், வடசென்னையில் உள்ள இரண்டு மின் நிலையங்களில் இருந்து தலா 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. பழைய மின் நிலையங்களின் உற்பத்தி 1000 மெகாவாட் குறைந்துள்ளது. மிகப்பெரிய மின்தடை என்பதெல்லாம் உண்மைதான். இந்த 2,600 மெகாவாட் மின்சார பற்றாக்குறை நிரந்தரமானதல்ல; விரைவில் சரியாகிவிடும்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் இருக்கும் தனியார் மின் நிலையத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அங்கிருந்து 1500 மெகாவாட் வர இருக்கிறது. இதற்காக அங்கிருந்து ஹெச்.டி.சி லைன் மற்றும் சால்ட்டர் டிசி லைன் போடப்பட்டு வருகிறது. அந்த தனியார் கம்பெனி எது, அதிலிருந்து துல்லியமாக எந்தெந்த காலகட்டங்களில் மின்சாரம் வாங்குவது என்பதெல்லாம் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வேலை முடிந்துவிட்டால் பற்றாக்குறையாக இருக்கும் 2500 மெகாவாட் மின்சாரத்துக்குப் பதில் 3100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அப்போது, உபரி மின்சாரமே 600 மெகாவாட் அளவுக்கு இருக்கும். இதனால், கோடை காலத்தில் மின்வெட்டு அறவே இருக்காது.

இது முழுக்க அ.தி.மு.க அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்யப்பட்ட ஏற்பாடு.

முந்தைய ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் தனியாரிடம் வாங்கும்போது ரூ.16 என்ற கணக்கில் ஒப்பந்தங்கள் போட்டனர். ஆனால், இப்போது யூனிட் ரூ2.50 என்ற கணக்கில் போடப்பட்டுள்ளது. இது மத்திய அரசு மின்தொகுப்பில் இருந்து வாங்கும் தொகைக்கு இணையானது. இதுபோன்ற மின்வாரிய சீர்திருத்தங்களால்தான் தற்போது மின்வாரியத்துக்கு ஏற்கெனவே உள்ள கடன் அளவு ரூ.52,000 கோடி என்பது அப்படியே இருக்கிறது. இதற்கு முன்பு ஆண்டுதோறும் 20,000 கோடி நஷ்டக் கணக்கு காட்டிக்கொண்டிருந்தனர். அப்படியே சென்றிருந்தால் இப்போது மின்வாரியம் மூச்சுவிடமுடியாமல் ஒட்டுமொத்தமாக தனியாருக்கே சென்றிருக்கும் என்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x