Published : 16 Mar 2017 12:05 PM
Last Updated : 16 Mar 2017 12:05 PM

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அனுமதியின்றி வாகன கட்டணம் வசூல்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய வாசல் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு வெளியூர் செல்பவர்களுக்கு தனியாக கட்டண பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரயில் நிலைய முகப்பில் வாகனத்தை நிறுத்தி விட்டு, பயணச் சீட்டு முன்பதிவு செய்ய வருபவர்கள், உறவினர்களை அழைக்க வருபவர்கள் அதிகம்.

குறிப்பாக தினசரி மாலை கிளம்பும் கன்னியாகுமரி, அனந்தபுரி விரைவு ரயில்களில் தினசரி நூற்றுக்கணக்காணோர் செல்கின்றனர். இதேபோல், அதிகாலையில் சென்னை, கோவையில் இருந்து வரும் ரயில்களிலும் 500-க்கும் அதிகமானோர் நாகர்கோவிலில் வந்து இறங்குகின்றனர். இவர்களது உறவினர்கள் ரயில் நிலைய வாயிலில் பத்து நிமிடங்களுக்கு நிறுத்தும் வாகனங்களுக்கு அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

சில வாரங்களுக்கு முன் விஜயகுமார் எம்பி, ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலைய முகப்பு பகுதியில் அனுமதியின்றி பார்க்கிங் தளம் அமைத்து கட்டணம் வசூல் செய்தது தெரிய வந்தது. உடனே அதனை அகற்ற உத்தரவிட்டதோடு, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து சில வாரங்களுக்கு முகப்பு பகுதியில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கவில்லை.

கடந்த சில தினங்களாக மீண்டும் ரயில் நிலைய முகப்பு பகுதியில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எம்பி தடை செய்த பகுதியின் எதிர்புறத்தில் இடம் மாற்றி மீண்டும் ரூ. 5 வீதம் வசூல் செய்கின்றனர். பொதுமக்களுக்கும், பார்க்கிங் வசூல் செய்பவர்களுக்கும் வாக்குவாதமும் ஏற்படுகிறது. ரயில்வே உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x