Published : 01 Feb 2015 01:34 PM
Last Updated : 01 Feb 2015 01:34 PM

தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு மதிமுக வலியுறுத்தல்

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இந்துத்துவா கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மதிமுக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றட்டப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

வைகோ 50

மதிமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தலைவர் வைகோவின் 50 ஆண்டுகால பொதுவாழ்வு பொன் விழா மாநாட்டை, 2015 ஜூன் 27, 28 ஆகிய இருநாட்களில் தலைநகர் சென்னையில் வெற்றிகரமாக நடத்துவது என்றும், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரையும் பங்கேற்கச் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

பாஜகவுக்கு கண்டனம்

ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்து வந்தாலும் விலைவாசி குறையாமல் இருப்பதற்கு பாரதிய ஜனதா அரசின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம் ஆகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளையே பா.ஜ.க. அரசு பின்பற்றி வருவதற்கு கண்டிக்கத்தக்கது.

இந்துத்துவா முயற்சிகளுக்கு எதிர்ப்பு

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவித்து, சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவ அமைப்புகள் மதவெறி கொண்டு மக்களிடையே கலவர விதைகளைத் தூவி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் சாசனத்தை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். 'இந்து - இந்தி - இந்து ராஷ்டிரா' என்கின்ற முழக்கத்தைத் தற்போது இந்துத்துவா அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பைத் தீவிரமாக்கி வருவதும், கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து காவி மயமாக்கிடத் துடிப்பதும், சிறுபான்மை மக்களை மதமாற்றம் செய்திட ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவதும், அண்ணல் காந்தி அடிகளைச் சுட்டுக்கொன்ற மாபாவி கோட்சே புகழ் பாடி வருவதும், சிறுபான்மை கிறிஸ்தவ மக்களின் புனித நாளான ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தைக் கொண்டாடத் தடை போடுவதும், பகவத் கீதையைத் தேசிய நூல் என்பதும், நாட்டில் விரும்பத்தாகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிப்பதுடன் இந்துத்வா நாசகார சக்திகளின் அக்கிரம முயற்சிகளை வேறுடன் களைய பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

காவிரி பிரச்சினை

தமிழ்நாடு அனைத்து வகையிலும் சோதனைகளைச் சந்தித்து வரும் இக்கட்டான காலகட்டத்தில், காவிரி உரிமையை நிலைநாட்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராகவும், சீரிய பணியாற்றிட பொறுப்பு ஏற்று தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனை காப்பாற்றும் கடமையைத் தன் தோள்மீது சுமந்துள்ள வைகோவுக்கு மதிமுக பொதுக்குழு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்

ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கவும், மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக பிப்ரவரி 18 ஆம் தேதி தலைநகர் சென்னையைத் தவித்து புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட14 மாவட்டங்களிலும், மார்ச் 11 ஆம் தேதி தலைநகர் சென்னையிலும், மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 இல் தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டத்தை காவிரி பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவது என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

நியூட்ரினோ ஆய்வு கூடாது

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்போ, தொழில் வளர்ச்சியோ ஏற்படாது. தேனி மலைப்பகுதியை அழிப்பது மட்டும் இன்றி, அங்கு வசிக்கும் மக்களையும் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிலைமைதான் உருவாகும். எனவே, மத்திய அரசு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

அதானி குழுமம்

மத்திய அரசின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தும் முகவராக அதானி குழுமம் தென் மாவட்டங்களில் நிலங்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தென் மாவட்ட விவசாயிகள், அதானி குழுமத்தின் சதித் திட்டங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்றும் மதிமுக வலியுறுத்துகின்றது.

கூடங்குளம் பிரச்சினை

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 2.7 விழுக்காடு அளவு மட்டுமே உள்ள அணுமின்சக்தி தயாரிப்புக்காக மக்கள் நலனைப் பலியிடும் மத்திய அரசுக்கு கழகப் பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணுஉலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

அகதிகளை அனுப்பக் கூடாது

இலங்கையில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதால் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார்.

இலங்கையின் அதிபராக மைத்திரி பால சிறிசேன பொறுப்பு ஏற்ற பின்னர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜனவரி 19 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களான ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை - இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது.

இதற்குப் பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை, ராணுவ முகாம்கள் இன்னமும் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்றது; எனவே, தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழ் ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று மத்திய அரசுக்கு மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்களின் பூர்வீக தயாகப் பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், 2009 இல் நடைபெற்ற போரில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, சொந்த நிலங்களையும் வீடுகளையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களின் உடைமைகள் திரும்பக் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

மீனவர் பிரச்சினை

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், அவர்களின் மீன்பிடி கருவிகள், படகுகளைப் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி மீன்பிடித் தொழில் நடத்தவும், கச்சத் தீவு பகுதியில் மீன்பிடி வலைகளை உலர்த்துதல், ஓய்வு எடுக்கும் உரிமைகளை நிலைநாட்டவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளை உடனடியாகத் திரும்பப் பெற இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

முழு மதுவிலக்கு தேவை

தமிழ்நாட்டில் வரலாறு இதுவரை காணாத அளவுக்கு ஒரு லட்சம் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியரைத் திரட்டி, மது ஒழிப்பு மராத்தான் ஓட்டத்தைத் தலைவர் வைகோ தலைமையில் கழகம் வெற்றிகரமாக கடத்திக் காட்டியது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடும்வரை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் போராட்டம் ஓயாது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மேற்கு மாவட்டங்களில் வைகோ மது ஒழிப்பு விழிப்புணர்வு முதல்கட்ட வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

மின் கட்டண உயர்வு

மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது. எனவே, தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.

இலவசத் திட்டங்களுக்காகக் கோடிக் கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு மானியம் அளித்து உதவ முன்வரவேண்டும் என்று கோருவதுடன், ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

நியாயமான விலையில் சிமென்ட்

பெட்ரோல், டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், சிமென்ட் விலையை மட்டும் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. எனவே, மக்களுக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கரும்பு விலை

கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் ஆகத் தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

நதிநீர் இணைப்பு

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பயன் பெறுகின்ற வகையில், 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாமிரபரணி - நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு, வெள்ள நீர் கால்வாய் வெட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், தாமிரபரணியில் இருந்து ஆண்டுதோறும் 13 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க முடியும். வறட்சிப் பகுதிகளான ராதாபுரம், நான்குநேரி மற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயம் செழிப்பது மட்டும் இன்றி, நிலத்தடி நீரும் உயரும். எனவே, தமிழக அரசு தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அணையைத் தூர்வாரி ஆழப்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் விவகாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணியாக இருப்பதுடன், பொதுமக்களின் உயிருக்குக் கேடு விளைவித்து வரும் வகையில் செயல்பட்டு வருகின்ற நாசகார ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையை மக்கள் நலன் கருதி உடனடியாக அகற்றிட வேண்டும்.

தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கடலோர மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவரும் கனிமவளத் தாதுமணல் கொள்ளை குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்; இயற்கை வளங்களை முழுமையாகச் சுரண்டும் தாது மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

விவசாயிகளை சூறையாடும் முயற்சி

பாரதிய ஜனதா கட்சி அரசின் திட்டங்கள் அனைத்தும், பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்தான் தீட்டப்பட்டு வருகின்றன. 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், இந்தியா முழுவதும் 100 நவீன நகரங்கள் ஏற்படுத்தப்படும் என மோடி அரசு அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு நகரமும் 1000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், இந்த நவீன நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகத் திகழும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து இருக்கின்றார். இத்திட்டத்தைச் செயற்படுத்திட, ஜனவரி 31-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு பேசியபோது, அரசு - தனியார் கூட்டுப் பங்களிப்புடன் இந்த ஆண்டு நவீன நகரங்கள் தொடங்கப்படும் என்றும், தற்போதைய நகர்ப்புற வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் இல்லாமல் மேம்பட்ட வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கின்ற வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றார்.

நவீன நகரங்கள் அமைப்பதற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்காகவே மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கின்றது. மேலும், நகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ் மக்களை, வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்களைப் பறிக்கவும் திட்டமிடும் மோடி அரசின் நடவடிக்கைக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், வளர்ச்சியின் பெயரால் வசதி நிறைந்த வாழ்க்கையை நடத்துவதற்கு ஏழை எளிய மக்களையும் விவசாயிகளையும் சூறையாடும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை

இலங்கையின் பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள ரணில் விக்கிரம சிங்கே, இலங்கையில் கூட்டு ஆட்சி முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ஒற்றை ஆட்சி முறைதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். புதிய அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கப்போவது இல்லை.

இந்தப் பின்னணியில் இலங்கை அரசும், இந்தியாவின் நரேந்திர மோடி அரசும் கூட்டாகச் சதித்திட்டம் வகுக்கின்றன. மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசின் இனக்கொலைக் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள விடாமல் தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நரேந்திர மோடி அரசு முனைந்துள்ள துரோகம் கண்டனத்திற்குரியது ஆகும்.

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழர்களின் மரணபூமியாக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

இலங்கையின் புதிய அதிபர் இந்தியா வருவதற்கும், மார்ச் மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்வதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடும், உலக நாடுகளை ஏமாற்றி, மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகத்தான் என்பதே உண்மை ஆகும்.

தமிழ் இனக் கொலை புரிந்த ராஜபக்ச கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும். தமிழகத்திலும் தரணியிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில் ஈடுபடுத்துவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x