Published : 16 Jun 2016 12:55 PM
Last Updated : 16 Jun 2016 12:55 PM

மேயர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம்: மதுரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வார்டுக்கு ரூ.15 லட்சம் வழங்க முடிவு

மதுரை மாநகராட்சியில் நேற்று மேயர் (பொ) தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ரகசியமாக நேற்று நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி கூட்டம் ஜூன் 17-ம் தேதி நடைபெறுகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளதால் இந்த கூட்டம் மாநகராட்சியின் கடைசிக் கூட்டமாகக்கூட இருக்கலாம். இந்நிலையில் நேற்று மேயர் (பொ) கு.திரவியம் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் ரகசிய ஆலோசனைக் கூட்டம் மாநக ராட்சியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் அதிகாரிகள், மற்ற கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்க அழைப்பு இல்லை.

இந்த கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றியும், உள்ளாட்சித் தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும் வகையில் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள் கூறியதாவது:

கடைசி இரு ஆண்டுகள், மாநகராட்சி நிர்வாகம் புறநகர் வார்டுகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளித்தது. அதனால், நகர்புற வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய ஏராளமான பணிகள் தேக்கம் அடைந்தன. குறிப்பாக நகர்ப்புற குடியிருப்பு பகுதி சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமாக இருக்கின்றன. குடிநீர் தட்டுப்பாடும் அதிகளவு இருக்கிறது. குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க பெரிய நீர் ஆதார திட்டங்கள் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கேட்டு மக்களை சந்திக்கவே முடியாத நிலையில்தான் தற்போது அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். அதனால், கடைசி நேரத்தில் வார்டுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நடக்கும் கூட்டத்தில் கொண்டுவரப்படுவதாகவும், அந்த தீர்மானத்தில் இடம்பெற வேண்டிய ரூ.15 லட்சத்துக்கான வார்டு பணிகளை கேட்பதற்காகவே இந்த கூட்டம் நடந்தது.

அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய ரூ.15 லட்சம் பணிகளுக்கான கடிதத்தை மேயரிடம் கொடுத்தனர். திமுக, மற்ற கட்சி கவுன்சிலர்கள் அவர்கள் வார்டுகளுக்கான ரூ.15 லட்சத்துக்கான வளர்ச்சிப் பணிகளை ஆணையரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி வரும் 10 நாளில் ஒதுக் கப்படுவதாகவும், அதற்கான வளர்ச்சி பணிகளை உடனடியாகத் தொடங்கவும் உத்தரவிடப்படுவதாகவும் கவுன்சிலர்களுக்கு உறுதியளிக்கப்ப ட்டது. வரும் உள்ளாட்சித்தேர்தலில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. பெண்களுக்கான இந்த 50 வார்டுகளை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x