Published : 21 Mar 2014 09:49 AM
Last Updated : 21 Mar 2014 09:49 AM

கூட்டணியை ஜெ. முறித்துக்கொண்டது ஏன்?: மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்

ஊழல் எதிர்ப்புப் பற்றி பேச கம்யூனிஸ்ட்டை தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை என விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனந்தனை அறிமுகம் செய்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

விழுப்புரம் (தனி) தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனந்தனின் அறிமுகக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாலை எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் வேட்பாளர் ஆனந்தனை அறிமுகம் செய்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதிமுக-வில் கூட்டணி தொடர்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரதன், பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கிய பேச்சுவார்த்தை 6 சுற்றுகள் முடிந்தும் தொடங்கிய இடத்திலேயே இருந்தது.

இதற்கிடையே 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் எங்களை சந்தித்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர், ‘சந்தோஷத்துடன் இணைந்தோம், தற்போது சந்தோஷத்துடன் பிரிவோம்’ என்று சொல்லிப் பிரிந்தார்கள். அப்போது எங்களை விலக்கக் காரணம் தெரியவில்லை. இப்போது பாதி தெரிகிறது. ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பற்றியோ, மோடி பற்றியோ சிறிது கூட விமர்சிப்பதே கிடையாது. பாஜக-வை ஆதரிக்கவே திட்டமிட்டு எங்களுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக்கொண்டார்.

18 தொகுதிகளில் போட்டியிடும் நாம் மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திமுக மற்றும் அதிமுக அல்லாத வேறு வேட்பாளர்களை ஆதரிப்போம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x