

தமிழகத்துக்கு 4 பக்கங்களிலும் பாதிப்புகள் உருவாகியுள்ளன என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
மதுரை மாவட்டம், பரவையில் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலர் புகழேந்தி வரவேற்றார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மாரநாடு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கதிரேசன் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலர் அழகுசுந்தரம், தொண்டரணி பாஸ்கரசேதுபதி, மாநகர் மாவட்ட செயலர் பூமிநாதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் வைகோ பேசியது: இரவு பகல் பாராது 23 ஆண்டுகள் முல்லை பெரியாறு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடியது இக்கட்சி. ஏற்கெனவே நல்ல பெயர் வாங்கிய இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்றார்.
முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயர்த்துவதால் தமிழகத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா பாசன பகுதியை வேளாண் பாசனப் பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்க வலியு றுத்தி மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.
தமிழக மீனவர்களை இலங்கை தாக்குகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. கேரளம் புதிய அணை கட்ட துடிக்கிறது. ஆந்திர அரசு பாலாற்றினை உயர்த்துவதாகக் கூறுகிறது. இதன்மூலம் 4 பக்கங்களிலும் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
மதுரை புதூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியது: அதிமுக அரசு கல்விக் கடனை ரத்து செய்ய தவறியதால் மதுரையில் பொறியாளர் தற்கொலை நடந்தது. அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்