Published : 04 Jan 2017 12:22 PM
Last Updated : 04 Jan 2017 12:22 PM

பேருந்து நிலையமா? இருசக்கர வாகன நிறுத்தமா?- திண்டாடும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம்

பனியன் ஏற்றுமதி தொழிலில் அசுர வளர்ச்சியுடன், ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடி வர்த்தகம் ஈட்டி ‘டாலர் சிட்டி’ என்ற பெயரைப் பெற்றுள்ள திருப்பூர் நகரின் மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்கிறது.

அங்கு போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் 1997-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பில் திருப்பூர் வடக்கு பகுதியில் ரூ.3.48 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 50 பேருந்துகளை நிறுத்த முடியும். மேலும், பயணிகள் வசதிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகளும் கட்டப்பட்டன.

திருப்பூர் வடக்குப் பகுதியிலிருந்து வரும் கோவை, அவிநாசி, கோபி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டுப்பாளையம், ஊட்டி, பெருந்துறை உள்ளிட்ட வெளியூர் பேருந்துகளை திருப்பூர் நகரில் செல்ல அனுமதிக்காமல், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இந்தப் பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம்.

ஆனால், தனியார் பேருந்து உரிமையாளர்களும், அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், “புதிய பேருந்து நிலையத்துக்குப் பேருந்துகளை இயக்கினால், பயணிகள் கூட்டம் இருப்பதில்லை, இதனால், நஷ்டம் ஏற்படுகிறது” என்று புலம்பினர். அதனால் இங்கே கட்டப்பட்ட கடைகள் பெரும்பாலானவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

ஒரு கட்டத்தில் திருச்சி, தஞ்சை, கரூர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகளைச் செய்தனர் அதிகாரிகள். இதனால், இருசக்கர வாகன நிறுத்துமிடம் களைகட்டத் தொடங்கியது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான கிராம மக்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், தினமும் சுமார் 2 ஆயிரம் வாகனங்கள், இந்தவாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, பேருந்து நிலையத்துக்கு எதிரிலும் ஒரு வாகன நிறுத்துமிடம் உள்ளது. இவைதவிர, பேருந்து நிலையத்துக்கு அருகில் தனியார் சிலர் வாகன நிறுத்துமிடங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கடைக்காரர்கள் கூறியது: இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு, இங்கு வருவதைக் காட்டிலும் இரு மடங்கு பேருந்துகள் வருகின்றன. அதேபோல, ரயில் நிலையத்திலும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால், அங்கெல்லும் இந்த அளவுக்கு பெரிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் இல்லை. அந்த அளவுக்கு இங்குள்ள வாகன நிறுத்துமிட குத்தகைதாரர்கள் செல்வாக்குடன் திகழ்கின்றனர். அதனாலேயே பேருந்து நிலையத்தின் நடுவில் பெரும் பரப்புடன் உள்ளது இந்த வாகன நிறுத்துமிடம். குறைந்தபட்சம், ஒரு நாளைக்கு 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களுக்குமேல் இங்கு நிறுத்த முடிகிறது.

கட்டணக் கழிப்பிடம்

பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள கோயில் இடத்தையும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்காக குத்தகை விட்டுள்ளனர். அங்கும் சுமார் 1,000 வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஒரு வாகனத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அங்கு சிறுநீர் கழிக்க ரூ.5 வாங்குகிறார்கள்.

பேருந்து நிலையத்தைச் சுற்றி சிலர் சிறுநீர், மலம் கழிக்கிறார்கள். அவர்களை போலீஸார் மிரட்டுவதும், கட்டணக் கழிப்பிடத்துக்குச் செல்லுமாறு வலியுறுத்துவதும் தொடர்கிறது.

இங்குள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் உண்டு. ஆனால், அங்கு பயணிகளுக்கான நிழற்குடை இல்லை. மேலும், புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்லும் வெளியூர் பேருந்துகளின் வேகத்தைக் குறைக்கும் வகையில் வேகத்தடைகளும் அதனால், அடிக்கடி விபத்துகள் நேரிட்டு, பலர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் இருந்தாலும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள சாலை தடுப்புகளில் அபாய ரிஃப்ளக்டர்கள் இல்லை. அதனால் இரவில் அதன் மீது வாகனங்கள் மோதுகின்றன.

பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் சாக்கடை வசதியும் கிடையாது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் சாக்கடைக்காக பள்ளம் தோண்டினர். ஆனால், அப்பணியை அரைகுறையாக நிறுத்திவிட்டனர். திறந்து கிடக்கும் பள்ளத்தில் பலர் விழுந்து காயமடைகின்றனர். அதை மூடவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x