Last Updated : 16 Jul, 2016 02:58 PM

 

Published : 16 Jul 2016 02:58 PM
Last Updated : 16 Jul 2016 02:58 PM

நன்னடத்தை கைதிகளை திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதில் சிக்கல்: நிர்வாக ஒப்புதல் கிடைப்பதில் தாமதம்

தமிழகத்தில் கோவை - சிங்காநல்லூர், சேலம் - 5 பூங்கா, சிவகங்கை - மறவங்குளம் ஆகிய 3 இடங்களில் திறந்தவெளிச் சிறைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதல் திறந்தவெளிச் சிறை சிங்காநல்லூர் சிறை ஆகும். கடந்த 1956-ம் ஆண்டு 30.7 ஏக்கர் பரப்பளவுடன் திறக்கப்பட்டது. 1966-ம் ஆண்டில் சேலம் 5 பூங்கா திறந்தவெளிச் சிறை சுமார் 30 ஏக்கர் பரப்பளவுடன், 2013-ம் ஆண்டில் சிவகங்கை மறவங்குளம் திறந்தவெளிச் சிறை 84 ஏக்கருடன் பயன்பாட் டுக்கு வந்தது. தஞ்சாவூரில் திறந்தவெளிச் சிறை முன்னதாக செயல்பட்டு வந்தது. தஞ்சாவூர் பல்கலைக்கழகம் அங்கு அமைக் கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிறை மூடப்பட்டது.

தண்டனை பெற்று மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் திறந்தவெளிச் சிறைகளுக்கு அனுப்பப்படுகின் றனர். தேச விரோத வழக்குகளில் சிக்கியவர்கள், பாலியல், திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் சிக்கியவர்கள் திறந்தவெளிச் சிறைக்கு அனுப்பப்படுவது இல்லை. இதேபோல், தப்பியோடும் மனப்பான்மை கொண்டவர்களும் அனுப்பப்படுவது இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனையை அனுபவித்த, கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் திறந்த வெளிச் சிறைக்கு தேர்வு செய்து அனுப்பி வைக்கப்படுகின் றனர்.

35 வயது முதல் 50 வயது டைய நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட, விவசாயம் தெரிந்த கைதிகள் மட்டுமே தேர்வு செய் யப்படுகின்றனர்.

திறந்தவெளிச் சிறைகளில் விளைவிக்கப்படும் பொருட்கள் சிறைவாசிகளின் பயன்பாட்டுக்கே பயன்படுத்தப்படுகிறது. சிறைவா சிகளின் மனநிலையில் மாற்றம் கொண்டு வருவதற்கும், அவர்க ளால் சிறைவாசிகளின் உணவுத் தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக அடைக்கப்பட் டிருக்கும் கைதிகள், திறந்தவெ ளிச் சிறைக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறுகட்ட பரி சீலனைக்குப் பின்னர்தான் அரசு ஒப்புதலுடன் மாற்றப்படுகின்றனர். தற்போது, தேர்வு செய்யப்பட்டு இந்த சிறைகளுக்கு அனுப்பப்ப டும் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக சிறைத்துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து சிறைத் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “கோவை சிங்காநல்லூர் சிறையில் தானியங்கள் மற்றும் காய்கறி பயிரிடுதல், ஆடு, மாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் உள்ளன. சிங்காநல்லூர் திறந்த வெளிச் சிறையைப் பொறுத்த வரை சராசரியாக 100 கைதிகள் பணிக்குத் தேவை. ஆனால், தற்போது 4 கைதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். அங்கு 450 தென்னை மரங்கள், 30 மாடுகள், 60 ஆடுகள் உள்ளன. அவைகளைப் பராமரிப்பதிலும் சிரமம் உள்ளது.

அங்கு விளைவிக்கப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப்படும் விளைபொருட்களின் அளவு பாதியாக குறைந்துவிட்டது. பல் வேறு சிறைகளில் இருந்து கைதி களைத் திறந்தவெளிச் சிறைக்கு மாற்றுவதற்கு நிர்வாக ஒப்புதல் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடைக்காமல் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்” என்றார்.

இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் கூறும்போது, “திறந்தவெளிச் சிறையில் கைதி களின் எண்ணிக்கை குறைந்தி ருப்பது உண்மைதான். நிர்வாக ஒப்புதலுக்காக அரசுக்கு பட்டி யல் அனுப்பி வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் திறந்த வெளிச் சிறையில் போதிய எண்ணிக்கையில் கைதிகள் நிரப்பப்படுவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x