

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் வழி கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கவும் சேர்க் கைக்கு தனி கலந்தாய்வு நடத்துவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு உடனடித் தேர்வு முடிவுகள் 21-ம் தேதி வெளியிடப்பட்டன.
அந்த மாணவர்களும், ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் சேரும் வகையில் 2-வது கட்டமாக ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 9 மணிக்கு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஜூலை 25 (திங்கள்கிழமை) முதல் ஆகஸ்டு 1-ம் தேதி வரை தினமும் (ஞாயிறு தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. உரிய கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஆகஸ்டு 1-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.