

ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி, எப்போதும் போலவே ஆளும்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலை நடத்த தேர்தல் துறைக்கு ரூ.1 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்கு பல லட்சங்களை உள்துறை செலவிட்டுள்ளது. இதுதவிர, வருவாய்த்துறை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் ஒன்றரை மாதங்களாக இதற்காக கணிசமான நேரத்தை செலவிட்டுள்ளனர். இதற்கிடையே பணப்பட்டுவாடா செய்ததாக பரவலாக புகார்கள் எழுந்தன.
பணம் கொடுத்து ஆளுங்கட்சி வென்றதாக திமுக-வும், திருமங்கலம் பார்முலாவை தி.மு.க. பின்பற்றியதாக ஆளுங்கட்சியும் புகார் செய்தன. பெரிய கட்சிகளிடம் வம்பு எதற்கு என்பது போல், சிறிய கட்சிகள் போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டன.
இந்நிலையில், பணமும், மனிதநேரமும் அதிகமாக செலவாகும் இடைத்தேர்தல் அவசியம்தானா என்றும் சில தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். பொதுத்தேர்தல் நெருங்கி வருவதால், அதனுடனேயே இதுபோன்ற இடைத்தேர்தல்களை நடத்திவிடலாம் என்ற கருத்தும் எழுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து சிலரிடம் “தி இந்து” கருத்து கேட்டது. அதன் விவரம் வருமாறு:-
ப.சுசிஇந்திரா (23), சென்னை பல்கலைகழக சமூகவியல் துறை மாணவி:
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இடைத்தேர்தல்கள் நியாய மான முறையில் நடக்க வேண்டும். பணம் கொடுத்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற கருத்து நிலவு கிறது. இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம்:
சட்டப்படி ஆறு மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால், அனைத்து அமைச்சர்களும் அங்கு தொகுதியில் சென்று முகாமிடுவதும், பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கட்சிகள் மாறி, மாறி புகார் செய்வதையும் பார்த்தால் இது போன்ற தேர்தல் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.
அதற்குப் பதிலாக, முந்தைய தேர்தலில் இரண்டாமிடம் பெற்றவரையே புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதற்கு குறிப்பிட்ட அளவு வாக்குகளை அவர் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்த வேண்டும்.
எ. பாலசுப்பிரமணி (35), தனியார் நிறுவன ஊழியர்:
இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் அந்த நாட்கள் மட்டும் தான் அங்குள்ள மக்களுக்கு பல அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பல்வேறு சலுகைகள் தருகின்றன. இடைத்தேர்தல்களினால் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எனவே, இது தேவையே இல்லை.
கே.அன்பழகன் (36), தனியார் நிறுவன ஊழியர்:
'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் யாராவது இறந்துவிட்டால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் கண்டிப்பாக நடத்த வேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி மக்களுடைய பிரச்சனைகளை அரசிடம் எடுத்து கூற முடியும்.
என் முத்துசாமி (78), ஓய்வுபெற்ற தனியார் ஊழியர்:
இடைத்தேர்தல் கண்டிப்பாக தேவை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் எல்லா கட்சிகளும் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி கொள்கிறார்கள். இடைத்தேர்தல் என்பது திருவிழாவாக போல் ஆகிவிட்டது.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.