கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம்: பிரதமர் நம்பிக்கை

கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம்: பிரதமர் நம்பிக்கை
Updated on
1 min read

ரஷயா பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதிசெய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா புறப்படுகிறார். இதையொட்டி, ரஷ்ய செய்தியாளர்களிடம் பேசும்போது, கூடங்குளம் அணு மின் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்காக, ரஷிய நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகும் என நம்புகிறேன்" என்றார். இதனிடையே, பிரதமர் தனது ரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்தாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இடிந்தகரையில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பாக, அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறும்போது, "மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையிலும் கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகளை நிறுவுவதற்கு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது" என்றது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், கடந்த ஜூலையில் முதல் அணு உலை, மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்த நிலையை எட்டியது. அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், 2வது அணு உலை கட்டுமானப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. அதேவேளையில், கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிராக ஒராண்டுக்கும் மேலாக இடிந்தகரையில் மக்கள் போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in