Last Updated : 29 Dec, 2016 09:49 AM

 

Published : 29 Dec 2016 09:49 AM
Last Updated : 29 Dec 2016 09:49 AM

சசிகலாவிடம் கட்சித் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுக தலைமைப் பொறுப்பு வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவை சசிகலா வழிநடத்துவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'ஜெயலலிதா மறைந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றவும், வழி நடத்தவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழுவின் ஒப்புதல்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். | அதன் விவரம் >>அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அதன் விவரம் >> சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது ஏன்?- அதிமுக விளக்கம்

முன்னதாக வி.கே.சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. சசிகலாவின் தலைமைக்கு விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியேற்கிறது எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை வழிமொழிந்து பொதுக்குழு உறுப்பினர்கள் இசைவு தெரிவித்தனர்.

கூட்டத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பொதுக்குழு கூடியதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்:

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

* சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்று தீர்மானம்.

*முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை 'தேசிய விவசாயிகள் தினம்' என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம்.

*ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைத்து தீர்மானம்.

*ஜெயலலிதாவுக்கு மானுட சேவைக்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மகசசே விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம்.

*எம்ஜிஆர் நூற்றாண்டினை மக்கள் பணி ஆண்டாக அணுசரிக்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து தீர்மானம்.

* ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று அதிமுக தொண்டர்கள் ஒன்றுகூடி கழக ஒற்றுமைக்கு உறுதியேற்பர்.

* ஜெயலலிதாவின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தமிழகத்தை நல்வழியில் நடத்திச் செல்லும்; அவர் காட்டிய வழியில் நல்லாட்சியை வழங்கும் என்ற உறுதிமொழியை இந்தப் பொதுக்குழு மேற்கொள்கிறது.

* கழக சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2ல் கூறப்பட்டுள்ளபடி, கழகப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக நியமித்து இந்தப் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்குத் தேவையான ராணுவ உதவிகளையும், வாகனங்களையும், இன்ன பிற உதவிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்த மத்திய அரசுக்கு இந்தப் பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

* அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிச் செய்தியை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக..

அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும்படி அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றி சசிகலாவிடம் அளித்துள்ளனர்.

பொதுச் செயலாளர் மட்டுமின்றி முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பதவிகளை ஏற்பது தொடர்பாக சசிகலா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது. செயற்குழுவும் தொடர்ந்து பொதுக்குழுவும் கூடுகிறது.

அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,270 பேர், 280 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

படங்கள்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x