Published : 05 Apr 2017 08:08 AM
Last Updated : 05 Apr 2017 08:08 AM

சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல்: தினகரன், மதுசூதனனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க அறப்போர் இயக்கம் முடிவு

டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் ப.சுதர்சன், ஜெயராம் வெங்கடேசன், தீபா சேஷாத்ரி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்லில் மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜனநாயக சீர்திருத்த அமைப்பு, தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அங்கமான அறப்போர் இயக்கம் சேர்ந்து 57 வேட்பாளர்களின் வேட்புமனு பத்திரங்களை ஆய்வு செய்தது. 5 வேட்பாளர்களின் உறுதிமொழிகள் தெளிவாக இல்லாததால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த ஆய்வில் 57 வேட்பாளர்களில் 7 பேர் தம் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில், தேமுதிக வேட்பாளர் பி.மதிவாணன், சுயேச்சை வேட்பாளர் என்.குணசேகர் ஆகிய இருவர் மீதும் கடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். போட்டியிடும் 57 பேரில் 9 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா), நாம் தமிழர் கட்சி, காமராஜர் தேசிய காங்கிரஸ் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.கலைக்கோட்டுதயத்தின் சொத்து மதிப்பு ரூ.14.14 கோடி. அதிமுக (அம்மா) வேட்டாளர் டிடிவி தினகரன் சொத்து மதிப்பு ரூ.10.78 கோடி. அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) வேட்பாளர் இ.மதுசூதனனின் சொத்து மதிப்பு ரூ.5.38 கோடி.

டிடிவி தினகரன், அடையாறில் உள்ள தனது வீட்டின் மதிப்பை ரூ.1.13 கோடி என உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அந்த வீட்டின் மதிப்பு அரசு வழிகாட்டி மதிப்பின்படி ரூ.13 கோடியாகும். இதேபோல, ஆவடி அடுத்த திருநின்றவூரில் தனக்கு 3.11 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும் மதுசூதனன் குறிப்பிட்டுள்ளார். உண்மையின் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.15 கோடியாகும்.

உண்மைக்கு மாறான தகவல்களை உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வியாழக்கிழமை (நாளை) மனு அளிக்க உள்ளோம். தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். மேலும், உறுதிமொழிப் பத்திரத்தில் தவறான தகவல்கள் அளித்ததற்காக சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x