

‘அம்மா கல்வியகம்’என்ற பெயரில் இளைஞர்களுக்கான இலவச ஆன்லைன் கல்வி இணைய தளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமையை எதிர்த்து கடந்த 7-ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார். அன்று முதல் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வரு கிறார். அவருக்கு 12 எம்பிக்கள், 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித் துள்ளனர். மூத்த நிர்வாகிகள் சி.பொன்னையன், இ.மதுசூதனன் உள்ளிட்டோரும், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் ஆதரவாக உள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் தினமும் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 24-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஓபிஎஸ் சென்றார். அங்கு, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, நீதி கேட்டு மக்கள் மத்தியில் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார்.
இதற்கு முன்னோட்டமாக தற்போது, மாவட்டந்தோறும் தனக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறார். இதுவரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை நிர்வாகிகளை சந்திக்க முடிவெடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தந்த நிகழ்வின் மூலம், ஓபிஎஸ்-க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில், ஓபிஎஸ் அணியின் தொழில்நுட்ப பிரிவு முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘அம்மா கல்வியகம்’ எனும் இலவச கல்வி இணையதளம் தொழில்நுட்ப பிரிவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை இன்று காலை 10 மணிக்கு தன் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த இணையதளத்தில் மாணவர்களின் உயர் கல்விக்கு தேவையான ஏராளமான விஷயங்கள் இடம் பெறும் என தொழில்நுட்ப பிரிவினர் தெரிவித்தனர்.