Published : 22 Jun 2016 01:49 PM
Last Updated : 22 Jun 2016 01:49 PM

தனியார் சந்தைக்காக பேரூராட்சி சந்தைக்கு பூட்டு: வாடிப்பட்டி பேரூராட்சியின் ஒரு சார்பு நடவடிக்கையால் வியாபாரிகள் பாதிப்பு

மதுரை அருகே வாடிப்பட்டியில், தனி யார் வாரச் சந்தைக்காக பேரூராட்சி சந்தையை செயல்படுத்தாமல், கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் பூட்டியே வைத்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாடிப்பட்டி பேரூராட்சி யில் பஸ் நிலையம் அருகே கடந்த ஒரு நூற்றாண்டாக வாரச் சந்தை செயல்படுகிறது. இந்த வாரச்சந்தை தனியார் சார்பில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் நடத்தப் படுகிறது.

இந்த சந்தையில் ஊசி, பாசி முதல் காய்கறிகள், கோழிகள், ஆடுகள், மாடுகள், பூக்கள், உணவுப் பண்டங்கள் உட்பட அனைத்தும் விற்கப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வகை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். பொதுவாக தனியார் மற்றும் அரசு சந்தைகளில் ஒரு நபருக்கு இவ்வளவு என்ற வகையில் குறிப்பிட்ட தொகை நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால், வாடிப்பட்டி தனியார் சந்தையில் வியாபாரிகள் விற்கும் ஒவ்வொரு சிப்பத்துக்கும் ரூ. 80 கெடுபிடியாக வசூல் செய்கின்றனர். ஒரு சிப்பத்துக்கு ரூ. 80 வீதம் 10 சிப்பம் வைத்திருந்தால் ரூ. 800 நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு கோழிக்கு 20 ரூபாயும், ஆடு, மாடுக்கு 80 ரூபாயும் வசூலிக்கின்றனர். இதற்கு எந்த ரசீதும் கிடையாது. சந்தையில் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு இல்லை.

அதனால், வியாபாரிகள் சந்தைகளில் விற்கும் ஒவ்வொரு பொருளையும் விலையை அதிகமாக வைத்து விற்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் இந்த ஒரு சந்தை மட்டும் செயல்படுவதால், பொதுமக்களும் வேறு வழியின்றி கேட்கும் விலைக்கு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த தனியார் சந்தைக்கு கடிவாளம் போடும் வகையில், கடந்த 2001-ம் ஆண்டு வாடிப்பட்டியில் இந்த தனியார் சந்தைக்கு அருகேயே தாதம்பட்டி மந்தை திடலில் பேரூராட்சி சார்பில் ரூ. 10 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் புதிதாக சந்தை கட்டப்பட்டது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த சந்தை செயல்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த சந்தை தற்போது திறந்தவெளி கழிப்பிடமாகவும், நள்ளிரவில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது. தனியார் சந்தையில் தொடரும் கெடுபிடி வசூலால், அரசின் சந்தையில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய ஆர்வமாக இருந்தும், பேரூராட்சி நிர்வாகம் இந்த சந்தையை செயல்படுத்த ஏனோ நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தற்போது இந்த சந்தையைச் சுற்றிலும் முட்புதர்கள் மண்டி அதன் முன்பு வணிக வளாக கட்டிடங்கள் வந்துவிட்டன. அதனால், பேரூராட்சி சந்தை இருக்கிற இடமே தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது. தனியார் சந்தைக்கு சாதகமாகவே இந்த சந்தையை செயல்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பாட்ஷாவிடம் கேட்டபோது, பேரூராட்சி சந்தைக்கு ஆரம்பத்தில் டெண்டர் விடப்பட்டது. சில காலம் யாரும் டெண்டர் எடுக்க வரவில்லை. பின்பு டெண்டர் எடுத்தவர்கள் வியாபாரிகள் வராததால் விட்டுச் சென்றனர். தற்போது இந்த சந்தையைச் சீரமைத்து புதிதாகக் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட முடிவு செய்துள்ளோம் என்றார். தனியார் சந்தை நடத்துவோரிடம் கேட்டபோது, முறையாக தொழில்வரி கட்டுகிறோம். காலத்துக்கேற்ப முறையான கட்டணம் வசூலிக்கிறோம் என்றனர்.

மண் புழுதியில் காய்கறி வியாபாரம்

இதுகுறித்து வாடிப்பட்டியைச் சேர்ந்த பி. மகாராஜன் கூறியதாவது:

வணிக வளாகத்துக்கு இணையாக வசூல் செய்யப்படும் வாடிப்பட்டி தனியார் சந்தையில், எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. குடிக்க குடிநீர் இல்லை. கடைகள் இல்லை. இந்த சந்தையில் மண்புழுதியில் வைத்தே காய்கறிகளை வியாபாரம் செய்கின்றனர். கடைகளில் வெயிலில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் பைகளை கட்டி தொங்கவிட்டுள்ளனர். மழை நேரத்தில் சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

பொதுமக்கள், வியாபாரிகள் நலனுக்காகவே பேரூராட்சி சார்பில் சந்தையை கட்டினர். ஆனால், பேரூராட்சி நிர்வாகம், இந்த தனியார் சந்தை நடத்துவோருக்கு சாதகமாக அரசு சந்தையை திறக்காமலும், பராமரித்து விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x