

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற பாடுபவோம் என அக்கட்சித் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 26-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மலரஞ்சலி செலுத்திய பின்னர், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் அதனை வழி மொழிந்தனர்.
40 தொகுதிகளிலும் அதிமுக-வை வெற்றி பெறச் செய்து, தேசத்தை முன்னெடுத்துச் செல்லும் அதிகாரத்தை ஜெயலலிதாவிற்கு கொடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர். இது தவிர தமிழர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக காங்கிரசுக்கு கண்டனமும் உறுதிமொழியில் இடம் பெற்றிருந்தது.
தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழகத்திலிருந்து ஒருவர் இந்தியாவுக்கு தலைமை ஏற்கும் காலம் கனிந்திருக்கிறது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமையுடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.