

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) மறைமலை நகர் திட்டத்தில் 105 வீட்டு மனைகளையும் மணலி புதுநகர் திட்டத்தில் 82 மனைகளையும் ஒதுக்கீடு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் குலுக்கல் நடத்தப்பட்டது.
எண் குளறுபடி காரணமாக மறைமலைநகர் திட்டத்தில் 35 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் விடுபட்ட மனைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் சென்னை கீழ்ப் பாக்கம் பால்ஃபர்ஸ் சாலையில் உள்ள லாய்டி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், சிஎம்டிஏ தலைமை திட்ட வரைவாளர் கீதா, முதுநிலை திட்ட வரைவாளர் எஸ்தர், முதுநிலை நிதி ஆலோசகர் மலைச்சாமி, கண் காணிப்பு பொறியாளர் ஓம் நாராயணன் மற்றும் விண்ணப்ப தாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குலுக்கல் மூலம் குறைந்த வருவாய் பிரிவில் (எல்ஐஜி) 22, நடுத்தர வருவாய் பிரிவில் (எம்ஐஜி) 6, உயர் வருவாய் பிரிவில் (எச்ஐஜி) 7 என மொத்தம் 35 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் விவரம் சிஎம்டிஏ அலுவலகத்தி லும் அதன் இணையதளத்திலும் (www.cmdachennai.gov.in) இன்று வெளியிடப்படும்.