விவசாயிகளின் தற்கொலையை அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

விவசாயிகளின் தற்கொலையை அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
2 min read

தமிழக விவசாயிகளின் தற்கொலையை அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''அதிமுகவின் ஆட்சியைப் பொறுத்தவரையில், முந்தைய 5 வருடகால ஆட்சியாக இருந்தாலும் சரி, அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இப்போதைய ஆட்சியாக இருந்தாலும் சரி, தமிழக விவசாயிகள் தொடர்ந்து பல கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி, பல்வேறு போராட்டங்கள் நடத்தும் நிலையில், குறிப்பாக எலிக்கறி சாப்பிட வேண்டிய நிலையில், பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அதைவிட கொடுமை என்னவெனில், தமிழகத்தில் தினம் தினம் 5 பேர் அல்லது 6 பேர் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியின் காரணமாகவும் உயிரிழக்கும் கொடுமையும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்படி இறந்திருக்கக்கூடிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நிதியுதவிகளை வழங்கிட வேண்டுமென்று நான் தொடர்ந்து பலமுறை இந்த அரசுக்கு வேண்டுகோளாக எடுத்து வைத்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அதில், ''உடனடியாக நான் உங்களை சந்திக்க வேண்டும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வருவதற்கு நான் காத்திருக்கிறேன், அதற்காக நேரத்தை ஒதுக்கித் தாருங்கள்'' என்று கடிதம் எழுதி அவருடைய அலுவலகத்தில் சேர்த்து விட்டு, இரண்டு நாட்களாக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுவரையில் அப்படி சந்திப்பதற்கான நேரம் கொடுப்பதாக எந்த பதிலும் வரவில்லை என்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து இந்த அரசு யோசிக்கவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அமைச்சர்களையாவது அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதல் சொல்லக்கூடிய பணியில் இந்த அரசு ஈடுபட்டு இருக்கிறதா என்று கேட்டால், அதுவுமில்லை.

'இனிமேல் இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க வேண்டும், தொடரக்கூடாது, அப்படி தற்கொலை செய்து கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள், அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும்' என்ற உறுதிமொழியையாவது, இந்த அரசின் சார்பில் முதல்வரோ அல்லது வேளாண்மைத்துறையின் அமைச்சரோ ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டு இருக்கின்றார்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. ஆக, இதையெல்லாம் பார்க்கின்றபோது உள்ளபடியே வேதனையாக உள்ளது.

ஏற்கெனவே நான் அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்டி, விவசாய சங்கங்களை எல்லாம் அழைத்துப் பேசி, பல தீர்மானங்களை எல்லாம் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பதற்கு ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதைத்தான் வலியுறுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த கோரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இந்த ஆட்சியில் இருக்கிறது.

5-ம் தேதி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கிறது. இந்த மறியல் போராட்டம் மட்டுமல்ல, விவசாய சங்கங்கள் நடத்தும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் திமுக தொடர்ந்து பங்கேற்று வருகிறது. எனவே அந்த நிலை நிச்சயமாக தொடரும்.

முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி இருப்பதாகவும், முதல்வர் பதவியில் தொடர்வதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரச்சினை இருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கக்கூடிய அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கக்கூடிய அமைச்சர்களே, முதல்வர் மாற வேண்டும், வேறொருவர் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று சொல்கின்ற செய்திகளை பார்க்கின்றபோது, இதற்கெல்லாம் முதல்வராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் இதுவரையிலும் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது ஏனென்பது எனக்கும் புரியவில்லை.

தென் பகுதியில் இருக்கக்கூடிய திமுக தோழர்கள், பொதுமக்கள், அதேபோல அங்கிருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அலங்காநல்லூரில் ஒரு மாபெரும் போராட்டத்தை திமுக முன்னின்று நடத்துகிறது. அந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எல்லாம் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றன. மிகப்பெரிய அளவில் அந்தப் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, அந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போராட்டமே நடைபெறுகிறது. மத்திய அரசு தொடர்ந்து உறுதிமொழி தந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு நடத்தி விடுவோம் என்று சொல்கிறார்கள். எனவே, அதன்படி எப்படியும் நடந்து விடும் என்று நம்புவோம்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in