

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்ச்சியில் பாஜகவினரை அழைத்து தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''முத்துமாரியம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான இந்தக் குளத்தை பொறுத்தவரையில், நான் எம்.எல்.ஏ. என்கிற முறையில் இங்கு பலமுறை ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறேன். அப்படி பலமுறை குளத்தின் பிரச்சினையைப் பற்றி கோரிக்கையாக வைத்தபோதும், இதுவரையில் அவர்கள் எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை.
எனவேதான், திமுக சார்பில் நாங்களே முன்னின்று இதை தூர் எடுக்கின்ற பணியை இன்றைக்கு நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். இந்தப் பணியை நாங்கள் முறையோடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளோடு கலந்து பேசி, அதற்குப் பிறகு அவர்களின் முறையான அனுமதியைப் பெற்று தொடங்கியிருக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரையில், குடிநீர் பிரச்சினையைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் அவர்கள் சிந்தித்து பார்க்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிநீர் தட்டுப்பாடு வந்திருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால், குளம் குட்டைகளை எல்லாம் முன்கூட்டியே தூர்வாரி தண்ணீரை சேமிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை அன்றைக்கு திமுக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என திமுக ஆட்சியில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், அதிமுக ஆட்சியில் எந்தவொரு கூட்டுக் குடிநீர்த் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எனவேதான் எதிர்க்கட்சி என்ற முறையில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்க செய்ய முடிந்ததை செய்து வருகிறோம். இது தொடரும்.
சென்னையின் நீராதங்களான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் எல்லாம் வறண்டு வருகின்றன. தமிழகம் முழவதுமே ஏரிகள் வறண்டு விட்டன. எனவே, தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பதவியை தக்க வைத்துக் கொள்வதில் தான முதல்வரும், அமைச்சர்களும் அக்கறை காட்டி வருகின்றனர்.
டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாகண்ணு தெரிவித்து இருக்கிறார். விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அக்கறை கொண்ட ஒரே கட்சி திமுக மட்டுமே. எனவே, அவர்களது போராட்டத்துக்கு திமுக நிச்சயம் பக்கபலமாக இருக்கும்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் பாஜகவுக்கு எதிராக திமுக ஒன்றிணைக்கிறது என்று பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி கேட்பதற்கான தகுதி பாஜகவினருக்கு இல்லை. அவர்களை மட்டம் தட்டிப்பேசுவதாக யாரும் கருத வேண்டாம். காரணம் என்னவென்றால், திராவிட இயக்கங்களாஇ ஒழிப்பதுதான் எங்களுடைய முதல் வேலை என்று அவர்களே தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி சொல்பவர்களை அழைத்து வந்து தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்ச்சி மேடையில் உட்கார வைத்து அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை.
அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து ஏற்கெனவே பலமுறை ஆளுநரிடம் முறையிட்டு இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அவரிடத்தில் முறையிடுவதால் எந்தப் பலனுமில்லை. எனவே, இதையெல்லாம் இனி மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.