

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரின் தந்தை ஆர்.கே.அஸ்தானா வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரின் தந்தை ஆர்.கே.அஸ்தானா சில மாதங்களாக தலைசுற்றல், மயக்கத்தால் அவதிப்பட்டுவந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரவீன் குமார் தன் தந்தையை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலேயே சேர்த்து சிகிச்சை அளித்துவந்தார். கடந்த 10-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையின் முதியோர் சிகிச்சைப் பிரிவில் அஸ்தானா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக சுயநினைவின்றி இருந்தார். அவரது உடல்நிலை வியாழக்கிழமை அதிகாலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகாலை 4.45 மணிக்கு இறந்தார். மகன் பிரவீன்குமார் தவிர, அஸ்தானாவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
தந்தையின் உடலை பிரவீன்குமார் கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தேர்தல் துறை ஊழியர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அரும்பாக்கம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.