Last Updated : 03 Feb, 2016 10:46 AM

 

Published : 03 Feb 2016 10:46 AM
Last Updated : 03 Feb 2016 10:46 AM

இடஒதுக்கீடு முதல் மேக் இன் இந்தியா வரை: கோவையில் மோடியின் 10 அம்ச பேச்சு

அம்பேத்கர் பெயர் இருக்கும் வரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

கோவையில் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சிக்காக வந்த பிரதமர், கொடிசியா திடலில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். "வணக்கம் இனிய கோவை மாநகரம் வந்ததில் மகிழ்ச்சி" எனத் தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

கோவை கூட்டத்தில் மோடி பேசியதன் 10 அம்சங்கள்:

* மத்தியில் ஒன்றரை ஆண்டு ஆட்சியின் மூலமாக தற்போது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறோம். நாட்டின் எதிர்காலம் குறித்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது சில பேருக்கு வலிக்கிறது.

* இந்த ஒன்றரை ஆண்டில் அமைச்சர் மீதோ, ஆட்சியில் உள்ளவர்கள் மீதோ ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியவில்லை. அதனால், மக்களவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

* முக்கியமாக, நான் ஆட்சி பொறுப்பேற்றபோது சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத 1,800 தேவையற்ற சட்டங்கள் இருந்தன. அவற்றில் 700 சட்டங்களை நீக்குவதற்காக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் மாநிலங் களவையில் நீக்கவிடாமல் காங்கிரஸ் கட்சியினர் தடுக்கிறார்கள்.

* தற்போது உள்ள தொழிலாளர் சட்டத்தை திருத்தி அவர்களுக்கு கூடுதலாக போனஸ் கிடைக்கச் செய்யலாம் என்றாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றவிடாமல் செய்கிறார்கள்.

* கரும்பு ஏற்றுமதி இறக்குமதி விதிகளில் திருத்தம் செய்து சர்க்கரை ஏற்றுமதிக்கு வழிவகுத்தோம். எத்தனால் உற்பத்திக்கு அனுமதி கொடுத்தோம். பருப்பு, தானியங்களுக்கு குறைந்தபட்ச விலையை வழங்கி அதன் உற்பத்தியைப் பெருக்க வழிவகுத்துள்ளோம்.

* விவசாயிகள் இயற்கை சீற்றத்தின்போது பாதிக்கப்படாமல் விளைபொருட்களுக்கான தொகையை ஈடுசெய்ய பயிர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

* மொத்தமாக 60 ஆண்டுகளாக கிடைக்காத திட்டங்களை ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்கச் செய்துள்ளோம். இதனால், அவர்களின் (எதிர்க்கட்சிகள்) தூக்கம் போய்விட்டது.

* அம்பேத்கரின் 125-வது ஆண்டு விழாவை கொண்டாடி அவருடைய ஸ்டிக்கர், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டோம். நாடாளுமன்றத்தில் அவர் குறித்து விவாதம் நடத்தினோம். லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை அரசு சார்பில் மீட்டு நினைவு சின்னமாக்கியுள்ளோம். மும்பையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* அம்பேத்கரை யாரெல்லாம் மறந்து இருந்தார்களோ, தலித் ஓட்டுக்காக இத்தனை ஆண்டு காலம் அரசியல் செய்து வந்தார்களோ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மோடி பின்னால் தலித்துகள் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அதனால், இட ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவலை பரப்புகிறார்கள். காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட அவர்கள் முன்னுக்கு வர வேண்டும். அவர்கள் முன்னுக்கு வந்தால்தான் இந்த நாடு முன்னேறும். ஆகையால், அம்பேத்கர் பெயர் உள்ள வரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்.

* ஒரு நாடு முன்னேற ஒருமைப்பாடு அவசியம். நமது நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 35 வயதினர். இது இளமையான நாடு. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஓராண்டில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. மேலும், அரசுப்பணிகளில் சேர லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லா ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், அந்நிய நேரடி முதலீடு மூலமாக கிடைத்த வளர்ச்சி, முத்ரா வங்கி திட்டம், ஸ்டான்ட் அப், ஸ்டார்ட் அப் இந்தியா, திறன்மிகு இந்தியா ஆகிய திட்டங்களின் பலன் குறித்து விவரித்தார். இருப்பினும், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மோடி எதையும் பேசவில்லை.

கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x