

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மழலையர் வகுப்புக்குச் செல்லும் குழந்தை முதல் 60 வயதைக் கடந்த முதியோர் வரை அனைத்து வயதுப் பெண்களுமே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஏழை, பணக்காரர்,சாதி, மதம், வயது, படிப்பு, பொருளாதாரம், சமூக அந்தஸ்து என எந்த பாகுபாடும் இன்றி சகல தரப்பு பெண்களுமே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும், சட்டம் படித்த பெண்களால்கூட இந்த தொல்லைகளில் இருந்து தப்ப முடியவில்லை என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஒரு அதிர்ச்சித் தகவலை இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பெண் வழக்கறிஞர், இதேபோன்ற புகாரை வெளியிட்டிருந்தார். இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா சட்டப் பள்ளியில் பயின்று வரும் மிஹிரா சூட் என்ற இளம்பெண், தனது சீனியர் வழக்கறிஞர் தன்னிடம் எல்லை மீறி நடந்தது பற்றி திங்கள்கிழமை ‘லீகலி இந்தியா’ என்ற பிளாக்கில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க உடனடியாகவும் தீவிரமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வழக்கறிஞர் கருத்து
இதுகுறித்து பெண்கள் உரிமை களைப் பாதுகாப்பதற்கான பல இயக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் வழக்கறிஞர் சுதா ராம லிங்கம் கூறுகையில், ‘‘பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் பல்வேறு சமூக நெருக்கடிகளால் அந்தக் கொடுமை குறித்து வெளியே கூறுவதில்லை.
இந்த நிலையை மாற்ற வேண்டும். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து வெளியில் பேசக் கூடிய தைரியத்தை பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தரும் புகாரின் பேரில் விரைவாகவும், தீவிரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாதவரை சட்டம் படித்த பெண்களால்கூட இந்தக் கொடுமைகளில் இருந்த தப்ப முடியாது’’ என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா கூறும்போது, ‘‘பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து 1997-ம் ஆண்டு விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.
‘‘பெண் வழக்கறிஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது மிகவும் உணர்ச்சிபூர்வமான பிரச்சினை.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுவதோடு, தவறு உறுதி யானால் கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி நேர்மையான நீதிபதிகள் மற்றும் நீதித் துறையின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் முயற்சிகளுக்கு இடம் தரக் கூடாது’’ என்று மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் கருத்து தெரிவித்தார்.