Published : 01 Jan 2017 03:24 PM
Last Updated : 01 Jan 2017 03:24 PM

தேனியில் நிலத்தடி நீரை காக்க மணல் திருட்டுக்கு எதிராக களம் இறங்கிய கிராம மக்கள்

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமான மணல் திருட்டை தடுக்க சிலமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் களமிறங்கியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் ஆறு, குளம், கண்மாய், ஓடைகள் வறண்டு விட்டன. அதேசமயம், மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் திருடுவோரை தடுக்க வருவாய் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மணல் திருட்டால் கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதன் காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து நீர்நிலைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கிராம மக்கள் களம் இறங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு அல்லிநகரம் கிராம கமிட்டியினர் சொந்த பணம் மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் அல்லிநகரம் குளத்தை தூர்வாரினர். இதையடுத்து, பொம்மையகவுண்டன்பட்டி கிராம மக்களும், தங்கள் பகுதியில் உள்ள கண்மாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் போடி அருகே சிலமலை கிராம மக்கள் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் சிலமலை கிராம கமிட்டி தலைவர் ரவி கூறுகையில்,

“போடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராசிங்காபுரம், சிலமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையை நம்பி மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக மழையில்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் 100 அடியில் தண்ணீர் வந்தது. ஆனால் தற்போது 600 முதல் 700 அடி வரை தோண்டினாலும் தண்ணீர் வருவதில்லை. மேலும் கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. இதற்கு முக்கிய காரணம் எங்கள் கிராமப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் நடந்து வந்த மணல் திருட்டுதான். மணல் திருட்டை தடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராசிங்காபுரம் கிராம கமிட்டியினர் தீர்மானம் போட்டு இதுவரை மணல் திருட்டு நடைபெறாமல் கண்காணித்து வருவதோடு, நீர்நிலைகளை பாதுகாத்து வரு கின்றனர்.

இதேபோல் எங்களது கிராமத்திலும் மணல் திருட்டை தடுக்க கடந்த வாரம் கிராம கமிட்டி கூட்டம் நடத்தி சிலமலை கிராமத்திற்குட்பட்ட அரசு புறம்போக்கு மற்றும் ஓடைகளில் மணல் திருடினால் அவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தீர்மானம் போடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு குறித்த பேனர்கள் கிராமத்தின் முக்கிய இடங்களில் வைத்துள்ளோம். தற்போது மணல் திருட்டு எதுவும் நடைபெறவில்லை. கிராம மக்களின் விழிப்புணர்வு காரணமாகத்தான் மணல் திருட்டை தடுக்க முடிந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x