தயாளு அம்மாளுக்கு அமலாக்கத்துறை சம்மன்: 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான விசாரணை
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு(84) அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, மார்ச் 28-ம் தேதி தயாளு அம்மாள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். நேரில் ஆஜராக முடியாவிட்டால், தனது சார்பில் சட்ட பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கைமாறாக வேறொரு நிறுவனத்தின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டது தொடர்பாக அந்நிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டிவியில் தலா 20 சதவீதம் பங்குகளை வைத்துள்ள எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்த சரத் குமார் ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்தி விட்டனர்.
இந்நிலையில், கலைஞர் டிவியில் மற்றொரு பங்குதாரராக உள்ள தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் வருமானக் கணக்குகள், சொத்துகள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை ஏற்கெனவே ஆய்வு செய்துவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக குசேகான் நிறுவனத்தின் இயக்குநர் ஆசிப் பல்வா, சினியுக் திரைப்பட நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வால், கரீம் முரானி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
