

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை வெலிக்கடை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை மதுரை சிறைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டார்.
ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பி.எமர்சன், பி.அகஸ்டஸ், பி.வில்சன், கே.பிரசாத், ஜெ.லாங்லெட். இவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற் படையால் 2011 நவ. 28-ல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் அக். 30-ல் தூக்கு தண்டனை விதித்தது. இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, இலங்கை இடையி லான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில், தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட 5 மீனவர் களையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஆனந்தமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த கோரிக் கைக்காக பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது. ரிட் மனுதான் தாக்கல் முடியும் என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து மனு திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், இதே கோரிக் கைக்காக வழக்கறிஞர் எஸ்.கருணாநிதி மற்றொரு மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
2011 நவ. 27-ல் தமிழ்நாடு மீன்வள இயக்குநரிடம் முறையாக அனுமதி பெற்று 5 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது போதைப் பொருள் கடத்தியதாக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை இடையி லான கடல் எல்லை ஒப்பந்தம் 1976-ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி இந்திய கடல் எல்லை மன்னார் வளைகுடாவில் 13 நாட்டிக்கல் மைல் தூரம் உள்ளது. ஐ.நா. தீர்மானம் மற்றும் சார்க் நாடுகள் இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இந்தியா, இலங்கை இடையே சிறைக் கைதிகள் பரிமாற்ற முறை நடைமுறையில் உள்ளது.
5 மீனவர்களையும் 12-வது நாட்டிக்கல் மைலில் கைது செய்துள்ளனர். இந்த 12-வது நாட்டில்கல் மைல் தூரத்தில் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகள் தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும். எனவே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.