ஹோட்டல், தியேட்டர், வங்கி, அலுவலகங்கள் 24 மணி நேரமும் இயங்க புதிய சட்டம்: 24 X 7 நல்லதா, கெட்டதா? - பொதுமக்கள், பிரமுகர்கள் கருத்து
தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள், அலுவலகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கும், இயங்குவதற்கும் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து பிரமுகர்கள், பொதுமக்கள் என்ன கருதுகிறார்கள்?
ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்
தியேட்டர்கள், ஹோட்டல்கள், ஐடி நிறுவனங்கள் இரவு நேரங்க ளில் இயங்கலாம் என்பது வரவேற்கத் தக்கதே. அதே நேரம் கடைகள், சிறு வணிக நிறுவனங்கள் போன்றவற்றையும் இரவு நேரங்களில் இயங்க மத்திய அரசே அனுமதி வழங்க வேண்டும். இதற்காக சட்டம் இயற்றப்படும் பட்சத்தில் அதை போலீஸார் மீறக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். சென்னையில் 10 மணிக்கு கடைகளை மூடச் சொல்லும் காவல்துறை, கோவை யில் இரவிலும் கடைகளை திறந்து வைக்கலாம் என்கின்றனர். இதுபோன்ற முரண்பாடுகள் இன்றி, எல்லா இடங் களிலும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
பழனி ஜி.பெரியசாமி, தென்னிந்திய தொழில் வர்த்தக சபை தலைவர்
இன்று வெளிநாடுகளில் இத்துறை கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இந்தியாவில் செயல் படுத்துவதில் தவறில்லை. இப்புதிய முயற்சி இந்தியப் பொருளாதார வளர்ச் சியில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும். அதேசமயம், ஹோட்டல்கள், வங்கிகள், திரையரங்குகளில் இரவுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, முக்கி யமாக பெண்களுக்கு போதிய பாது காப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
ஜவஹர்லால் சண்முகம், சூழலியல் செயல்பாட்டாளர், ஆவணப் பட இயக்குநர்
தொழிற்சாலைகள், மருத்துவமனை கள் 24 மணிநேரமும் இயங்கும்போது, திரையரங்குகள் இயங்குவதில் தவறு இல்லை. ஆனால், அதிக சத்தம் வெளியே வந்து பொதுமக்களுக்கு தொந் தரவை ஏற்படுத்தக்கூடாது. மேலும், படம் முடிந்து நள்ளிரவில்கூட மக்கள் வெளியே வருவார்கள் என்பதால், அந்த நேரத்திலும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
சி.புவனேஸ்வரி, திருச்சி பொறியியல் மாணவி
பகல் நேரத்தில் அவரவர் வேலைக் குச் சென்று திரும்பிய பிறகு வங்கி, அரசு அலுவலக வேலைகளை இரவில் முடித்துக் கொள்ளலாம். அரசு ஊழி யர்களும் டென்ஷன் இல்லாமல் பணி யாற்றுவார்கள். இவை அனைத்தும் ஷிப்ட் முறையில் இயங்குவதால், படித்த இளைஞர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
எஸ்.விஜயலட்சுமி, கடலூர்
அத்தியவாசிய சேவைப் பிரிவுகள், ஹோட்டல்கள் 24 மணிநேரம் இயங் கலாம். தற்போது பணம் எடுக்க பலரும் ஏடிஎம்களைத்தான் பயன்படுத்து கின்றனர். 24 மணிநேரம் என்பதற்கு மாற்றாக வங்கிகள் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதிக்கலாம். சனிக் கிழமை விடுமுறைகளை தவிர்க்கலாம். தியேட்டர்களைப் பொறுத்தவரை, இப்போது இருப்பதுபோல தொடர்வதே பெண்களுக்கு நல்லது.
ஜே.கரிகாலன், கடலூர்
இரவு நேரங்களில் ஹோட்டல்கள் இயங்குவது அவசியம். தற்போதுள்ள சூழலில் இரவு பகல் பாராமல் அனைவரும் பயணிக்கின்றனர். நீண்ட தொலைவு பயணம் செய்வோர் நள்ளிரவு நேரத்துக்கு வீட்டுக்குச் செல்லும்போது, உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் நல்ல உணவு கிடைப்பதில்லை. பெரும்பாலான ஹோட்டல்கள் மூடிவிடு வதால் சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் சாலையோர கடைகளையே நாட வேண்டியிருக்கிறது. வங்கியைப் பொறுத்தவரை 24 மணிநேரம் என்பதற்கு மாற்றாக விடுமுறையின்றி இயக்கலாம்.
பி. கார்த்திக், வழக்கறிஞர், அரிமா சங்க வட்டார தலைவர், திண்டிவனம்
மேற்கத்திய கலாச்சார திணிப்பால் சீரழியும் நமது பாரம்பரியமான இந்திய கலாச்சாரம் இன்னும் மோசமாக, வேகமாக சீரழியும். இப்போதே சென்னை போன்ற கார்ப்பரேட் நகரங்களில் மேல்தட்டு வாழ்க்கை என்பது முற்றிலும் கலாச்சாரத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை என்கின்றனர். தற்போது முழு நேரமும் திறந்திருக்கும் இது போன்ற இடங்களில் இன்னும் சொச்சம் இருக்கும் இளைஞர் சமுதாயமும் மொத்தமும் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
சி.உமாபதி, கைவினைஞர்கள் முன்னேற்ற சங்கம், விழுப்புரம்
இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவது மக்களுக்கு உளவியல் சிக்கலை கொண்டுவரும். வங்கிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். போலீஸாருக்கு பணிச்சுமை கூடும். சராசரி தூக்கம் கெடுவதால் தற்கொலைகள் அதிகரிக்க வாய்ப்பும் உண்டு. வங்கிகள் மட்டும் 24 மணிநேரமும் இயங்கலாம்.
என்.சி.கோவிந்தராஜ். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர், லால்பேட்டை, கடலூர்
வங்கிகள் 24 மணிநேரமும் இயங்கி னால் பொதுமக்கள் பணம் எடுக்க எளிதாக இருக்கும். ஆனால் அதிக அளவு வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் நடக்கும். 24 மணிநேர தியேட்டர்கள், ஹோட்டல்களால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கலாச்சாரம் சீரழியும். கல்வித் தரம் பாதிக்கும். தனியார் அலுவலகங்கள் இயங்கினால் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இருக்காது.
நந்தினி, மதுரை
ஹோட்டல்கள், மால்கள் செயல்படுவதால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். பெண்கள் பயமின்றி சென்று வரலாம். தற்போது தியேட்டர்கள் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. இவை கூடுதல் நேரம் செயல்படுவதால் எந்த பயனும் இல்லை. மத்திய அரசு செயல்படுத்தும் சட்டங்களுக்கு மாநில அரசு பெரும்பாலும் ஒத்துழைப்பது இல்லை. அதனால், இந்த சட்டம் சாத்தி யப்படுமா என்பது சந்தேகமே.
நாகலட்சுமி, மதுரை திருமோகூர்
பெண்களுக்கு தனியார் துறையிலும் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும். ஆனால், இதில் ஆபத்தும் உள்ளது. தற்போது, பகல் நேரத்திலேயே பெண்களுக்கு பொது இடத்திலும், பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு இல்லை. இரவு நேரத்தில் பெண்கள் அச்சமின்றி வேலைக்கு சென்று வரவும், பணிபுரியவும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். சென்னை தவிர பிற நகரங்களில் 7 மணிக்கு மேல் பெண்களை வெளியே அனுப்பவே தயங்குவதால் இந்த சட்டம் அனைத்து பகுதிகளிலும் பலனை தருமா என்பது கேள்விக்குறியே.
இ. கந்தையா, ஹோட்டல் உரிமையாளர், பாளையங்கோட்டை
இப்போது காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணிவரை ஹோட் டல் நடத்துவதே பெரும்பாடாக இருக்கி றது. பகலிலேயே பணத்துக்கு பாதுகாப் பில்லாத நிலையில் இரவு முழுக்க ஹோட்டல்களை திறந்துவைத்தால் என்னவாகுமோ தெரியவில்லை. இரவில் மதுகுடித்துவிட்டு ஹோட்டல்களுக்கு வந்து தகராறு செய்வோர் அதிகம். இதில் பெண்கள் எப்படி இரவில் பாதுகாப்பாக ஹோட்டல்களுக்கு வரமுடியும்? மருந்துக் கடைகள் தவிர மற்றவை 24 மணிநேரமும் திறந்திருந்தால் கெட்டதுதான் அதிகரிக்கும்.
இ.சுப்பையா, வியாபாரி, கன்னியாகுமரி
நம் நாட்டுக்கு, குறிப்பாக தமிழகத் துக்கு இதெல்லாம் ஒத்துவராது. இரவு 10 மணிக்கு மேல் சினிமா தியேட் டர், ஹோட்டல்கள், மால்களை பாது காக்கவே பெரும்பாடுபடுகிறார்கள். முழுநேரமும் செயல்பட்டால், தேவை யில்லாத பிரச்சினைகள் வரும். குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும். கொலையும் கொள்ளையும் வங்கிகளில் பகல் நேரத்திலேயே நடக்கிறது. பாதுகாப்பு இல்லாத நம்ம நாட்டுல இதுபோல திட்டத்தை அமல்படுத்தினா, நம்ம கலாச்சாரம் சீரழிந்து தப்புத்தண்டாதான் அதிகரிக்கும்.
கலா, இல்லத்தரசி, நாகர்கோவில்
அரசு மருத்துவமனைகளில் பகல் நேரத்திலேயே பல நேரங்களில் மருத்துவர்கள் இருப்பது இல்லை. அப்படியொரு நாட்டில் 24 மணிநேரமும் திரையரங்குகளும், ஷாப்பிங் மால் களும் திறந்திருக்க செய்வது தனி மனித பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கும் செயல். இரவு 8 மணியை கடந்து விட்டாலே குடிகாரர்களின் தொல் லையால் பெண்கள் கூனிக் குறுகும் இத்தேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் வெளியே கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதற்கும் யார் உத்தரவாதம்? வசதி படைத்த முதலாளிகள், அவர்களது தொழிலாளிகளின் உழைப்பை கசக்கி பிழியவே இச்சட்டம் துணைபோகும்.
எஸ்.கார்த்தி, திருவாரூர்
இந்த சட்டத்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அரசுத் துறைகள் சேவை அடிப்படையிலானது. எனவே, இத்திட்டத்துக்கு அரசுப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
சு.மூர்த்தி, சமூக ஆர்வலர், காங்கயம்
24 மணிநேரம் தொழிற்சாலைகள் இயங்கும்போது, சுற்றுச்சூழல், சுகா தாரம், உடல்நலம், குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற் படும். இது இயற்கை விதிகளுக்கு முரணானது. 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வணிக நிறுவனங்களில், இரவு பகல் பராமல் பெண்களும் பணி யாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், குழந்தை வளர்ப்பு குழந்தை களுக்கான பாதுகாப்பு, கல்வி கற்றல், தினசரி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
சிங்கராயர், சமூக ஆர்வலர், வேலூர்
வெளிநாட்டு கலாச்சாரத்துக்கேற்ப மாறிவருகிறோம். வங்கிகள் 24 மணி நேரமும் செயல்படும் என்பது பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு பெரு குகிறது என்பது மட்டும்தான் வெளியில் தெரியும். இதில், 20 சதவீதம் சாதகம், 80 சதவீதம் பாதகம் நிறைந்துள்ளது. இந்த சட்டம் கலாச்சாரத்தை அழிக்கும் போக்கு என்றே கூறலாம்.
பொன்னரசி, எல்ஐசி ஊழியர், வேலூர்
இரவு நேரத்திலும் பணியாற்ற வேண்டும் என்றால், பெண்களின் பாது காப்பில் நிச்சயம் குறைகள் ஏற்படும். பெண்கள் மனரீதியாக, உடல்ரீதியாக பாதிக்கப்படுவார்கள். குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாது. பெண்க ளுக்கு ஓய்வு அவசியம்.
எஸ்.எம்.செந்தில், மஞ்சள் ஏற்றுமதியாளர், ஈரோடு
இங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நகரங்களில் உணவகங்கள்கூட இயங்குவதில்லை. அதனால், அவர்கள் திறந்திருக்கும் நேரத் துக்குள் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், வெயில் கொளுத்தும் கோடை காலத்தில் இரவில் வங்கிகள், வணிக வளாகங் கள் திறந்திருப்பது மிகவும் பலனளிக் கும். நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
டி.பிரவீணா, தனியார் நிறுவன ஊழியர் - கோவை
இது பொதுமக்களுக்கு இடையூறாகத்தான் அமையும். இரவு நேரத்தில் மக்கள் அதிகம் பேர் நடமாடினால் திருட்டு போன்ற சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கும். மக்கள்தொகைக்கு ஏற்ப போலீஸார் எண்ணிக்கை இல்லை என்பதால், இரவு நேரங்களில் பாதுகாப்பு வழங்கு வது அவர்களுக்கு கூடுதல் சுமை யாகிவிடும். இரவு நேரங்களில் வணிக வளாகம், ஹோட்டல்களை திறந்து வைப்பதால் மின்சார செலவு கூடுத லாகும். ஏற்கெனவே, இளைஞர்கள் தாமதமாகத்தான் இரவில் தூங்கச் செல்கின்றனர். இந்த சட்டம் வந்தால் அவர்கள் இரவு முழுவதும் சுற்றித் திரிவார்கள். இது ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கும் இடையூறாக அமையும்.
