

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 2,853 இடங்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்காக நேரடியாகவும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் மொத்தம் 25,814 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, விண்ணப்பதாரர்களை வரிசைப் படுத்தி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் ஜி.செல்வராஜன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
விண்ணப்பதாரர்கள் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண்ணை (AR Number) பதிவு செய்து சம வாய்ப்பு எண்ணை தெரிந்துகொள்ளலாம். ஒரே கட்-ஆஃப் மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் வேதியியல் பாடங்களில் ஒரே மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப் படும் கணிதத்தில் ஒரே மதிப்பெண், ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப் படுத்த சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும்.
இதைத் தொடர்ந்து ஜூன் 17-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னர், ஜூன் 20-ல் தொடங்கும் முதல்கட்ட கலந்தாய்வின் முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளை யாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக் கான இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவின ருக்கான கலந்தாய்வு தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.