

தன் மீதும், தனது குடும்பத்தினர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திண்டிவனத்தில் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் செங்கல்பட்டு முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடுவண் புலனாய்வுப் பிரிவு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.
நானும், எனது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசு, மருமகன் மருத்துவர் பரசுராமன், பெயரன் மருத்துவர் பிரித்தீவன் ஆகியோரும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து எங்களின் பெயரை நீக்குவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.
செய்யாத தவறுக்காக பெரும் பழியை நாங்கள் சுமந்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருப்பதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக சுமந்து வந்த முள்மூட்டையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
திண்டிவனத்தில் நடந்த கொலையில் எனக்கோ அல்லது எனது கட்சியினருக்கோ எந்த தொடர்பும் இல்லை. புனிதமான மருத்துவ தொழில் செய்பவனாக வாழ்க்கையைத் தொடங்கிய நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை. ஆனால், என் மீது பழி சுமத்தினால் தான் அரசியலில் வளர முடியும்; மேலிடத்தைக் கவர முடியும் என்ற எண்ணத்தில் அப்போது அமைச்சராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி. சண்முகம் திட்டமிட்டு என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வைத்தார்.
இதை விசாரித்த காவல்துறை எனக்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கும் இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, எங்களின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்கினர். அதன்பிறகும் அரசியல் உள்நோக்கத்துடனும், அ.தி.மு.க. மேலிடத்தின் தூண்டுதலாலும் இந்த வழக்கை சி.பி.ஐ. மூலம் மறு விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் சி.வி. சண்முகம் வழக்குத் தொடர்ந்தார்.
அதன்படி நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணையின் முடிவில் தான் நானும் மற்றவர்களும் இவ்வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறோம். இதன்மூலம் தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எதிராக அவதூறுகளை பரப்பியதுடன், பொய் குற்றச்சாற்றுகளையும் சுமத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வெகுவிரைவில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.