Published : 26 Jan 2017 12:34 PM
Last Updated : 26 Jan 2017 12:34 PM

மத்தியக் குழு ஆய்வு ஏமாற்று வேலை; உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினரின் ஆய்வு ஏமாற்று வேலையாகவும், கண்துடைப்பு நாடகமாகவும் அமைந்திருக்கிறது. எனவே, மத்திய அரசு நிதி உதவி வழங்கும் வரை காத்திருக்காமல் தமிழக அரசே அதன் சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக வந்த மத்தியக் குழு, அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு சென்னை திரும்பியிருக்கிறது. குறைந்த உறுப்பினர்களுடன் வந்து அவசர, அவசரமாக நடத்தப்பட்ட ஆய்வு பெயரளவில் தான் அமைந்திருந்ததே தவிர, களநிலையை கண்டறியும் வகையில் அமையவில்லை. இந்த ஆய்வு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் பருவமழை பொய்த்திருக்கிறது. வரலாறு காணாத வறட்சியால் தமிழகத்தில் குறுவை, சம்பா ஆகிய இரு பருவ நெற்பயிர்களும், பிற பயிர்களும் கருகிவிட்டன. பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இதுவரை 250-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்திருக்கின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் வறட்சியின் கொடுமை உச்சத்தை அடைந்திருக்கிறது என்பதும், சென்னை, வேலூர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பதும் உறுதி செய்யப்பட்ட உண்மைகள். வறட்சி பாதிப்பை சரி செய்வதற்காக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கிறது.

தமிழக அரசின் கோரிக்கையில் உள்ள நியாயம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே வல்லுனர் குழுவை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

ஆனால், சென்னை வந்து கடந்த 23.01.2017 அன்று முதலமைச்சரை சந்தித்து பேசிய மத்தியக் குழு, அடுத்த இரு நாட்களில் கும்மிடிப் பூண்டி முதல் குமரி வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியுள்ளது.

இது எவ்வாறு சாத்தியம் என்பது தெரியவில்லை. மொத்தம் 9 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகத்திலுள்ள அதிகாரிகளையும் சேர்த்துக் கொண்டு நான்கு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்திருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஒரு குழு ஒரு நாளைக்கு 3 முதல் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கு சென்று வரவே இந்த அவகாசம் போதாது எனும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளமாகக் கூட பார்வையிட இயலாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகளால் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் பயிர்களை மட்டுமே மத்தியக் குழு பார்வையிடுகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிப்பின் அளவை கணக்கிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காட்சியை பார்க்கும் பார்வையாளர்களைப் போல சுற்றுலா சென்று திரும்பி வந்திருக்கின்றனர் மத்தியக் குழுவினர். மத்தியக் குழுவின் ஆய்வு திருப்தியளிக்கும் வகையில் இல்லை; கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை என்று அனைத்து மாவட்ட விவசாயிகளும் குற்றஞ்சாற்றியுள்ளனர்.

மொத்தத்தில் மத்திய குழுவினரின் ஆய்வு ஏமாற்று வேலையாகவும், கண்துடைப்பு நாடகமாகவும் அமைந்திருக்கிறது என்பது தான் உண்மையாகும். இந்த ஆய்வின் மூலம் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மழை குறித்த புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழையின் அளவு இயல்பை விட 60 முதல் 80 விழுக்காடு குறைவாக இருப்பதால் அவை கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.

10 மாவட்டங்களில் மழை அளவு 40 முதல் 60 விழுக்காடு குறைவாக இருப்பதால் அவை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும். அதுமட்டுமின்றி, தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, தமிழகத்திலுள்ள 16,682 வருவாய் கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள சாகுபடி பகுதியில் 87% பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல்லும், பிற பயிர்களும் வறட்சியால் கருகிவிட்டன என்பதை தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசு நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும். வறட்சி நிவாரணமாக மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு தான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குமா அல்லது சொந்த நிதியிலிருந்து வழங்குமா? ஒருவேளை மத்திய அரசு நிதி உதவி வழங்காவிட்டாலோ அல்லது பெயரளவில் மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கினாலோ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என கைவிரித்து விடுமா? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில் கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் கோரிய பேரிடர் நிவாரண நிதியில் பத்தில் ஒரு பங்கை கூட மத்திய அரசு வழங்கியதில்லை. இப்போது கூட வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விட்டு திரும்பிய மத்தியக் குழு அறிக்கை அளித்த பிறகும் தமிழ்நாட்டிற்கான நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை. வறட்சி நிவாரணம் வழங்குவதிலும் அது தான் நடக்கப் போகிறது.

மத்தியக் குழு ஆய்வை முடித்து அடுத்த வாரமே மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தாலும் கூட, அடுத்து சில மாதங்கள் கழித்து தான் மிகவும் சொற்பமான தொகையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும். மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரணத்தை அளவீடாகக் கொண்டால், தமிழகத்திற்கு அதிகபட்சமாக ரூ.1500 கோடி கூட கிடைக்காது.

வறட்சி பாதிப்பை சரி செய்ய ரூ.39,565 கோடி தேவை என தமிழக அரசு கோரியுள்ள நிலையில், ரூ.1500 கோடி மட்டும் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி வழங்கும் வரை காத்திருந்தாலோ, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தான் உழவர்களுக்கு பகிர்ந்து வாழ வேண்டும் என்றாலோ விவசாயிகளின் துயரங்களை எள் முனையளவும் தீர்க்க முடியாது; உழவர்களின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது. எனவே, மத்திய அரசு நிதி உதவி வழங்கும் வரை காத்திருக்காமல் தமிழக அரசே அதன் சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

நிபந்தனையின்றி அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த 250-க்கும் மேற்பட்ட உழவர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x