

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட பலர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஏற்கெனவே தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘விதிகளுக்கு உட்பட்டுத்தான் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது’’ என தெரிவித்து இருந்தார்.
இந்த பதில் மனுவுக்கு மு.க.ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் கே.பாலு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, இந்த வழக்கு அவைத் தலைவருக்குரிய தனி உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டது. எனவே இந்த வழக்கை முழு அமர்வு கொண்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி, “இந்த வழக்கு விசாரணை கோடை விடுமுறையான வரும் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும், அதற்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறையில் சிறப்பு அமர்வு களை ஏற்படுத்தி முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு வழக்கு களை விசாரிக்கிறது. அதுபோல சென்னை உயர் நீதிமன்றமும் இந்த கோடை விடுமுறையில் இந்த வழக்கை விசாரிக்க உத்தர விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.