

கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்தவர் ராஜராஜ சோழன். அதிமுக பிரமுகரான இவர், 2 தினங்களுக்கு முன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அருணைச் சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுகவைச் சேர்ந்த நான், சசிகலா முதல்வராக வேண்டி போராட்டம் நடத்தி னேன். இந்நிலையில், பிப்.11-ம் தேதி (நேற்று) காலை என் வீட்டுக்கு 2 கார்கள் வந்தன. அதில் இருந்த சிலர் என்னிடம் வந்து, ‘ஒரு முக்கிய நபர் உன்னிடம் பேச வேண்டும் என விரும்புகிறார், பேசு’ எனக்கூறி செல்போனைக் கொடுத்தனர். அதை வாங்கிப் பேசியபோது, எதிர்முனை யில் பேசிய நபர், தன்னை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
சொல்லுங்கள் என அவரிடம் நான் கேட்டதற்கு, “ஒழுங்கு மரியாதையா உயிரோடு இருக்க முயற்சி பண்ணு. என் அப்பாவுக்கு எதிராக அரசியல் செய்தாலோ, செயல்பட்டாலோ உன் குடும்பம், உன்னை இழக்க நேரிடும். நாங்கள் எதற்கும் தயங்காதவர்கள்” என எச்சரிக்கை விடுத்தார்.
எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவீந்திரநாத் மீதும், அவரைத் தூண்டிவிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டதற்கு, “ராஜராஜ சோழன் மனு கொடுத்துள்ளார். அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்படும்” என்றனர்.