முன்னாள் வீரர்களைக் காப்பதில் தமிழகம் முன்னோடி: முதல்வர்

முன்னாள் வீரர்களைக் காப்பதில் தமிழகம் முன்னோடி: முதல்வர்
Updated on
1 min read

முன்னாள் படைவீரர்களின் நலனைப் பேணிக் காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நாளை கொடிநாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி முதல்வர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்: தன்னுயிர் ஈந்தேனும் தாய் நாடு காக்கும் முப்படை வீரர்தம் ஒப்பற்ற பணிகளையும், உயரிய தியாகங்களையும் உணர்ந்து போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இமயம் முதல் குமரி வரை விரிந்து பரந்திருக்கும் நமது பாரத தேசத்தின் எல்லைகளை அல்லும் பகலும் பாதுகாப்பதுடன், தாய் திருநாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் இழக்கும் தியாக சீலர்களாம் நம் படைவீரர்களின் குடும்ப நலன்களைப் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

இந்தக் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்றிடும் வகையில் கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி, தேசப் பாதுகாப்புக்காகத் தியாகங்களைச் செய்த படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், அவர்தம் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத்தொகை, அவர்களின் மகள் திருமணத்திற்கு உயர்த்தப்பட்ட திருமண மானியம், குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனம், கோயில் பாதுகாப்புப் படையில் பணி புரியும் முன்னாள் படைவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் போன்ற

பல்வேறு நலத் திட்டங்களை முன்னாள் படைவீரர்களின் நலன் கருதியும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எனது தலைமையிலான அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

முன்னாள் படைவீரர்களின் நலனைப் பேணிக் காப்பதில் தமிழகம் என்றென்றும் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதை அனைவரும் நன்கு அறிவர். தமிழக மக்களின் தேசப் பற்றையும், தியாகம் போற்றும் மனப்பான்மையையும், இந்தியத் திருநாட்டிற்கு பறைசாற்றும் வண்ணம் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க

வேண்டுமென தமிழக மக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in