Published : 19 Mar 2014 05:41 PM
Last Updated : 19 Mar 2014 05:41 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் புதன்கிழமை அறிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் புதன்கிழமை அறிவித்தார்.

திருவள்ளூர் (தனி) - முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், நாகை (தனி) - முன்னாள் எம்எல்ஏ ஜி.பழனிச்சாமி, தென்காசி (தனி) - தற்போதைய எம்.பி. டி.லிங்கம், கடலூர் - அரசுப் பணியாளர்கள் சம்மேளன முன்னாள் தலைவர் கு.பாலசுப்ரமணியன், ராமநாதபுரம் - ஆர்.டி.உமாமகேஸ்வரி, திருப்பூர்- முன்னாள் எம்.பி. கே.சுப்பராயன், சிவகங்கை - வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணன், தூத்துக்குடி - வழக்கறிஞர் ஏ.மோகன்ராஜ், புதுச்சேரி - முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலை வெளியிட்ட பின்னர் நிருபர்களிடம் தா.பாண்டியன் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 9 வேட்பாளர்களை இறுதி செய்துள்ளோம். மத்தியக்குழு ஒப்புதலுக்குப் பிறகு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இடதுசாரிகள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு முடிவு செய்வோம்.

மத்தியில் காங்கிரஸ், பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய பாடுபடுவோம். பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தும் எண்ணம் இப்போது இல்லை. தேர்தலுக்குப் பிறகு ஜனநாயக சக்திகளுடன் ஆலோசித்து அதுபற்றி முடிவெடுப்போம்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x