

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கையுறை, முக உறை அணிவது போன்ற எந்தவிதமான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் அவர் பணியில் ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன்படி மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை செய்து வருபவர்கள் அதிலிருந்து வெளியே வந்தால் ரூ. 40 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் உள்ளவர்களின் பட்டியலை மத்திய அரசு கோரியுள்ளது. ஆனால், 10 மாநிலங்கள் மட்டுமே பட்டியலை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் உள்ளவர்கள் அப்பணியில் இருந்து வெளியேறவும், அவர்களுக்கு மத்திய அரசின் ரூ. 40 ஆயிரம் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதக் கழிவுகளே மனிதே அகற்றும் பணியை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.