திருச்செங்கோட்டில் ரூ.20 கோடி கேட்டு பெண் தொழிலதிபரை கடத்தி மிரட்டிய கும்பல்

திருச்செங்கோட்டில் ரூ.20 கோடி கேட்டு பெண் தொழிலதிபரை கடத்தி மிரட்டிய கும்பல்
Updated on
2 min read

ரூ.40 ஆயிரம், 15 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது கும்பல்

திருச்செங்கோட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபரை, அவரது கார் ஓட்டுநர் உட்பட 4 பேர் ரூ.20 கோடி கேட்டு காரில் கடத்திச் சென்றனர். பின்னர், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகையை பறித்துக் கொண்டு விடுவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மலைக்காவலர் கோயில் பின்புறத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பஷீர். அவர் திருச்செங்கோடு பட்டறைமேடு பகுதியில் ரிக் வண்டிகளுக்குத் தேவையான ஹைட்ராலிக்ஸ் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயரிழந்தார்.

இதையடுத்து அந்நிறுவனத்தை அவரது மனைவி ஷர்மிளா பானு (40) நடத்தி வருகிறார். வழக்கமாக மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு வரும் ஷர்மிளா பானு, மீண்டும் மாலை 4 மணியளவில் நிறுவனத்துக்கு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை வீட்டில் சாப்பிட்டுவிட்டு நிறுவனத்துக்கு புறப்பட்டார். காரை ஓட்டுநர் அக்பர் அலி ஓட்டினார். ஆனால், நிறுவனத்துக்கு ஷர்மிளா பானு செல்லவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே ஷர்மிளா பானுவின் தம்பி பாபுவை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், ரூ.20 கோடி வேண்டும், பணம் தராவிட்டால், ஷர்மிளா பானு மற்றும் அவரது குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.

அதில், அதிர்ச்சியடைந்த ஷர்மிளா பானு குடும்பத்தினர், உறவினர்கள், ஊழியர்கள் மூலம் தேடியுள்ளனர். இந்நிலையில் இரவு 11 மணியளவில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த ஷர்மிளா பானு காரை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் ஷர்மிளாவை அவரது குடும்பத்தினர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ஷர்மிளா பானுவை, அவரது கார் ஓட்டுர் அக்பர் அலி கடத்தியுள்ளார். சானார்பாளையம் வழியாக சென்ற அக்பர் அலி, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இரு இளைஞர்கள் மற்றும் பர்தா அணிந்திருந்த பெண் ஒருவர் ஏறியுள்ளனர்.

மர்ம நபர்கள் ஷர்மிளா பானுவிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். அதனால், அவர் பணம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அதற்கு கால அவகாசமும் கேட்டுள்ளார். அதையடுத்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகையை பறித்துள்ளனர்.

பின்னர் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி உள்ளனர். காரில் கடத்திச் செல்லும்போது ஷர்மிளா பானுவுக்கு மயக்க மருந்து தெளித்துள்ளனர். தொடர்ந்து மயக்க ஊசியும் போட்டுள்ளனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் உட்பட 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் தொழிலபதிபர் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in