

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ராமானுஜம், கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதை யடுத்து, புதிய டிஜிபியாக அசோக் குமார் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இவரது பதவிக்காலம் நிறை வடைந்து பணி ஓய்வு பெற்றார். அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதனால் அவர் டிஜிபி பதவியிலேயே தொடர்ந்தார்.
அசோக்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 4-ம் தேதி வரை உள்ளது. இந்நிலையில், அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரிடம் சட்டம் - ஒழுங்கு டிஜிபி பணி முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் பிறப்பித்துள்ளார்.
ராஜேந்திரன் மாற்றப்பட்ட தையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையராக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே டி.கே.ராஜேந்திரனுக்கு முன்பு சென்னை பெருநகர காவல் ஆணையராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த சு.அருணாச்சலம், நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.
டிஜிபியாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் இருவரும் தங்களது புதிய பொறுப்பை நேற்று ஏற்றுக்கொண்டனர்.