

மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற பிரதமர் உறுதி அளித்தார். அவரின் உறுதியைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டது.
முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிகட்டு அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம். இனி யாராலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதைத் தடுக்க முடியாது'' என்றார் முதல்வர் ஓபிஎஸ்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கினாலும், நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தங்களுடைய போராட்டத்தை போராட்டக் குழுவினர் தொடர்ந்தனர். மேலும் வாடிவாசல் அருகே நடந்த பணிகளையும் சிலர் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸார் நிறுத்தப்பட்டனர். போராட்டக் குழுவினருடன் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. மேலும் அலங்காநல்லூர் வரும் அனைத்து வழியையும் போராட்டக்காரர்கள் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.