

அடையாறில் உள்ள விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீசஸ் அண்டு செக்யூரிட்டி லிமிடெட் நிதி நிறுவனத்திடம் தாங்கள் செலுத்திய முதலீட்டுக்கான அசலையும், வட்டியையும் திருப்பித் தரவில்லை என்று சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் புகார் அளித்ததை ‘தி இந்து’ உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.சுப்பிரமணியன் கைது செய்யப்பட்ட தகவலும் வெளியானது. இந்நிலையில், விஸ்வபிரியா நிறுவனத்தின் சார்பில் ‘தி இந்து’ நாளிதழுக்கு அனுப்பப்பட்டுள்ள விளக்கத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:
விஸ்வபிரியா நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியனை ரிமாண்டுக்காக மறுநாள் (23.10.13) ஆஜர்படுத்தியபோது, அவரை கைது செய்தது தவறு என்று கூறி விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுப்பிரமணியனை விடுவிப்பதற்கு ஜாமீன் எதுவும் தேவையில்லை என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.
விஸ்வபிரியா நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பறிமுதல் நடவடிக்கையும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாறானது என்று கூறி அந்த சொத்துக்களை நிபந்தனையின்றி திருப்பி ஒப்படைக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.