டிஜிட்டல் பேனர் வைப்பதில் தகராறு சாதி மோதலாக உருவெடுக்கும் அபாயம்

டிஜிட்டல் பேனர் வைப்பதில் தகராறு சாதி மோதலாக உருவெடுக்கும் அபாயம்
Updated on
1 min read

கடலூர் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சிக்காக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கடலூர் எஸ்.என் சாவடிப் பகுதியில் பேனர் வைக்கும்போது, அப்பகுதி பாமகவைச் சேர்ந்த கிரி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைதொடர்ந்து இருதரப்பினரும் கோஷ்டியாக சென்று தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிரியின் தரப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனரை கிழித்தனராம்.

இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீசார் கிரியை கைது செய்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில், டிஎஸ்பி கிருஷ்ணசாமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கிரியை விடுவிக்கக் கோரி எஸ்.என்.சாவடி பேருந்து நிறுத்தம் அருகே பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர். கலைந்து போக மறுத்ததால், போலீசுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர்.

கிரியின் கைதை கண்டித்து சாவடிப்பகுதியில் திங்கள்கிழமை கடையடைப்பு நடந்தது. பாமக மாநிலத் துணைப்பொதுச்செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர், திங்கள்கிழமை காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகாவை சந்தித்தனர். அதேபோல் விடுதைலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.தாமரைச்செல்வன் தலைமையில் ஆட்சியர் கிர்லோஷ்குமாரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என பாமக கோரியுள்ளது. அவ்வாறு தடை விதிக்கும் பட்சத்தில் அனைத்துக் கட்சியினரும் அதை பின்பற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது.

பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடு

இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதிகாவிடம் கேட்டபோது, இருதரப்பிலும் குற்றவாளிகள் என சந்தேகப்படுவோரை அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறோம். டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் டிஜிட்டல் பேனர் வைப்பதில் புதிய அணுகுமுறை ஏற்படுத்தப்படும் என்றார்.

பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் சாவடி பகுதியில் கடையடைப்பு நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in