

பண பேர விவகாரம் வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போலீஸார் ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
முன்னதாக, பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், திமுக கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ப.தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். "வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சரவணனே குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை எல்லாம் விவாதிக்க முடியாது. கூவத்தூர் பேரம் தொடர்பாக ஆதாரம் கொடுத்தால் விவாதிக்க அனுமதியளிக்கிறேன்" என சபாநாயகர் தெரிவித்தார்.
ஆனால், இதை திமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. காவிரி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றனர். சபாநாயகர் குறுக்கிட்டு அமைதி காக்குமாறு கோரியும் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவையை நடத்த ஒத்துழைக்குமாறும் அமைதி காக்குமாறும் சபாநாயகர் தனபால் வலியுறுத்தினார். ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். "MLA FOR SALE" என்ற பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அவைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறும் மு.க.ஸ்டாலின் | படம்: ம.பிரபு
இதனையடுத்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் திமுகவுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.