Published : 20 Mar 2017 09:37 AM
Last Updated : 20 Mar 2017 09:37 AM

இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்: கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் அகில பாரத பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம்

மேற்கு வங்கத்தில் மத அடிப்படைவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்க அகில பாரத பிரதிநிதிகள் சபை கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யா பீடத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத பிரதிநிதிகள் சபை கூட்டம் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன்பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ்ஜோஷி ஆகியோர் கூட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடம் ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர் பாகைய்யா கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் இயக்கப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த 3 நாள் கூட்டத்தில் மேற்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். அங்கு சமீப காலமாக இந்துக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஆனால், அங்கு உள்ள போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மேற்கு வங்கம் நாட்டின் எல்லையோர மாநிலமாக இருப்பதால், அங்கு நிலவும் சூழல் தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அங்கு உள்ள மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு உள்ள மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தீர்மானம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். மேற்கு வங்கம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது. கேரளாவில் 1948-ல் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தாக்குதல்கள் நடக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதில் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அவர்களது அரசியல் முடிவுகளில் ஆர்எஸ்எஸ் தலையிடவில்லை என்றார்.



அப்போது, ஆர்எஸ்எஸ் தேசிய பிரசாரச் செயலாளர் மன்மோகன் வைத்யா, இணைச் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இக்கூட்டத்தில் 1,400 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தை தொடங்கிவைத்த மோகன்பாகவத், சுரேஷ்ஜோஷி ஆகியோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x