

எண்ணூர் துறைமுகம் அருகே நிகழ்ந்த கப்பல் விபத்தில் எத்தனை டன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கசிந்த எண்ணெய் படலத்தை அகற்று வதிலும் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 28-ம் தேதி எம்.டி. பி.டபிள்யூ.மேப்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் ஆகிய இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. முதலில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து 100 மெட்ரிக் டன் அளவு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்ததாக தகவல் வெளியானது. ஆனால், சட்டசபையில் மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது 1 டன் அளவு கச்சா எண்ணெய்தான் கடலில் கலந்தது என்றார்.
ஆனால், கடலோர காவல்படை இது வரை 170 டன் அளவுள்ள கச்சா எண்ணெய் பரவியுள்ள கடல் நீர் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள் ளது. இதற்கிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விபத்துக்குள் ளான கப்பலில் 58 ஆயிரம் டன் அளவுள்ள கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், மத்திய பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விபத்துக்குள்ளான கப்பலில் 32 ஆயிரத்து 813 டன் அளவு கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒவ்வொருவரும் மாறு பட்ட தகவல்களை தெரிவித்து வருவ தால் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து எத்தனை டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது என்பது குறித்து உண்மையான தகவல் தெரியாமல் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.