

தமிழகம் முழுவதும் நர்ஸிங் மாணவர்கள் 7-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி தனியார் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்களுக்கும் பணி வழங்கும் வகையில் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இதனால், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் நர்ஸிங் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நர்ஸிங் மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரி வளாகத்துக்குள் தங்கும் சென்னை நர்ஸிங் மாணவிகள்
சென்னையில் போராட்டம் நடத்தும் மாணவிகள் தங்கும் விடுதி பூட்டப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 1800 நர்ஸிங் மாணவிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்குக் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள், விடுதி அறைகள் ஆகியவை நிர்வாகத்தினரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி நர்ஸிங் மாணவி ஒருவர் கூறுகையில் "கழிப்பறைகளுக்குச் செல் லும் மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிட்டு விடுவேன் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தால் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று நிர்வாகம் மிரட்டுகிறது.
இரவு நேரங்களில் விடுதி அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வளாகத்தில் திறந்த வெளியில் பனியில் படுத்துக் கொள்கிறோம்'' என்றார்.
கஸ்தூரிபா காந்தி மருத்துவ மனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி கூறுகையில் "விடுதியில் இருந்து வெளியில் விடாமல் பூட்டி வைத்துள்ளனர். ஆதலால் பூட்டிய விடுதிக்குள் இருந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்” என்றார்.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் கே. சரத் கூறுகையில் "கழிப்பறைகளைப் பூட்டியதோடு போராட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை உணவு வழங்கப்படவில்லை. நிர்வாகம் இப்படி நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது" என்றார்.
மதுரையில் கருப்புத் துணி போராட்டம்:
மதுரை தனியார் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, மதுரை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம் முன் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புதன்கிழமை முதல் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோருடன் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே, 6-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மாணவிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவிகள் கூறும்போது, செவிலியர் பணிக்கு தேர்வு நடத்தி அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசாணை ரத்தாகும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
திருச்சியில் நோயாளிகள் பாதிப்பு:
திருச்சி அரசு செவிலியர் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தைத் தொடர்வதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
300-க்கும் மேற்பட்ட மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனையின் வாசலில் அமர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தியதையடுத்து அரசு மருத்துவமனை டீன் கார்குழலி மற்றும் அதிகாரிகள் அந்த மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 31-ம் தேதி ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளிதரன் மாணவிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படாததால் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
சனிக்கிழமை இரவும் மாணவிகள் அரசு மருத்துவமனையின் நுழைவு வாசலில் படுத்துக்கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். 5-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை கறுப்பு பேட்ஜ் அணிந்த நிலையில் மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூரில்…
இதேபோல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி நர்சிங் மாணவிகளும் உள்ளிருப்புப் போராட்டம், மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை கறுப்புப் பட்டை அணிந்தவாறு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடந்த 5 நாட்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் நீடிக்கும் போராட்டம்:
திருநெல்வேலியில், 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 29-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 5-வது நாளாக அவர்கள் கருப்பு பட்டை அணிந்து டீன் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,500 பேர் உள் நோயாளிகளாகவும், தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மாணவியரின் போராட்டத்தால் மருத்துவ பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.