

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர்.
பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளி யிலும் தேர்வெழுதும் மாணவர் களுக்காக சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டம் முடிந்ததும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்துச் சொல்லி தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் காலை 9 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைக்குச் சென்றுவிட்டனர். சரியாக காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடமும், விடைத்தாளில் விவரங்களை எழுத 5 நிமிடமும் கொடுக்கப்பட்டு சரியாக 9.30 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கினர். மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவடைந் தது. கற்றல் குறைபாடு, பார்வை யில்லாதோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் ஆகியோ ருக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் அளிக்கப்பட்டது. அவர்களுக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு உதவியாளர் கள் மூலமாக தேர்வெழுதினர்.
எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,371 மையங்களில் 10 லட்சத்து 38 ஆயி ரத்து 22 பேர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவர்கள் தவிர, தனித் தேர்வர்களாக 43 ஆயிரத்து 824 பேர் தேர்வெழுதினர். சிறைவாசி களும் 10-ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டனர். சென்னை புழல், கோவை, வேலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு தேர்வு மையங்களில் 10 பெண்கள் உள்பட 229 சிறைவாசி கள் தேர்வெழுதினர். சென்னை நகரில் 571 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 664 மாணவ-மாணவி கள் கலந்துகொண்டனர். அவர் களுக்காக 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வுக் கூடங்களில் மாணவர்கள் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடா வண்ணம் தடுக்க மாநிலம் முழுவதும் 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. பறக்கும் படையினர் மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோரும், மாவட்ட ஆட்சியர், கோட்டாட் சியர், வட்டாட்சியர் ஆகியோரும் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.
தேர்வு மையம் தடைசெய்யப் பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட தால் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்களின் வசதிக்காக தேர்வுக் கூடங்களில் குடிநீர், மின்விசிறி, விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ் முதல் தாள் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவி கள் தெரிவித்தனர். இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையே, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கு கின்றன.