

தங்கத்துக்கான மதிப்பு உயர்ந்துகொண்டே உள்ளது. இதை சற்று தாமதமாக உணர்ந்து கொண்ட பணம் படைத்த நிறுவனங்கள் தங்கநகை விற்பனையில் ஆர்வத்துடன் தங்களின் கிளைகளை அதிக அளவில் திறந்து விளம்பரங்கள் மூலம் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்தனர். இதனால் உள்ளூர் கடைகளைவிட, விளம்பரங்கள் மூலம் அறிந்த கடைகளை மக்கள் நாடினர்.
அந்நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு நகைகளை உள்ளுர் பொற்கொல்லர்களால் தயாரித்து தர முடியவில்லை.மேற்கு வங்கத்திலிருந்து இளைஞர்களை வரவழைத்து நகைகளை விரைவில் வேலைபகுப்பு முறையில் உடனுக்குடன் செய்து தர உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் உதவியுடன் குறைந்த கூலிக்கு தங்களுக்கு தேவைப்படும் அளவில் நகைகளுக்கு ஆர்டர் கொடுத்தனர். தற்போது நகைகளாகவே இறக்குமதி செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய அளவில் சிறிய அளவிலான மூக்குத்தியை அதிக அளவு ஏற்றுமதி செய்தது விழுப்புரம் பொற்கொல்லர்களே. தற்போது மூக்குத்தி அணிவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இன்னமும் குழந்தைகளுக்கான சிறிய அளவிலான மோதிரங்களை விழுப்புரம் பொற்கொல்லர்களே தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் உமாபதி தெரிவித்ததாவது:
முன்பைவிட இப்போது 14 மடங்கு வேலை கூடியுள்ளது. ஆனால் கூலி குறைந்துள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்துகொள்ள மத்திய அரசு அறிவித்தது. இதனால் அன்னிய செலாவணியில் அதிக இழப்பு ஏற்படுவதாகக் கூறி தங்க இறக்குமதியைக் குறைத்தது, தங்க நகைகளாகவே 15% வரியில் இறக்குமதி செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2% வரி விதிப்பை தொடங்கி தற்போது 15% வரியை உயர்த்தியுள்ளது. இதனால் 2000ல் கோவையில் 400 பேர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்பு தங்கத்தை கொடுத்து நகைகள் செய்ய சொன்ன நகைக்கடைக்காரர்கள் தற்போது பொற்கொல்லர்களையே முதலீடு வைத்து நகை செய்யச்சொல்கின்றனர். இத் தொழிலில் சயனைட் சர்வசாதாரணமாக கிடைக்கும். தங்க நகைகளை மெருகேற்ற சயனைட் பயன்படுத்தப்படுகிறது.
எங்களின் வாழ்க்கையை மெருகேற்ற முடியாத நிலை ஏற்படும்போது அதே சயனைடால் எங்கள் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே உடன்குடியில் பொற்கொல்லர் தங்கவேல்-விஜயா தம்பதி தங்களின் மூன்று குழந்தைகளை தவிக்கவிட்டு சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விழுப்புரத்தில் பொற்கொல்லர்கள் வசிக்கும் வீதிகளில் ஒன்றிரண்டு சயனைட் தற்கொலைகள் நடந்துள்ளது. இதை அவமானமாக எண்ணி அப்போது அது மறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டு மோகத்தில் உள்ள நம் மக்கள் 5 சவரன் நகை வாங்கும்போது கூடுதல் வரியைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. இதனால் உள்ளூர் நகை விற்பனையில் தொய்வு ஏற்படும். ஒரு கட்டத்தில் உள்ளூர் நகைத்தொழிலே நசிந்துவிடும் அபாயமும் ஏற்படும். தற்போது உள்ளூர் பொற்கொல்லர்கள் தயாரித்துவரும் தங்கச் சங்கிலி, மோதிரம், கைசெயின், டாலர் போன்றவையும் வரும் காலங்களில் வெளிநாடுகளி லிருந்தே இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு. இப்போதே ஆரம், நெக்லஸ் போன்ற நகைகள் வெளிமாநிலத்திலிருந்தே தருவிக்கப்படுகிறது. 5% கூடுதல் வரி, வாங்கும் மக்களைக் கட்டுப்படுத்தாது. காரைக்குடியில் பொற்கொல்லர்களுக்கு தலா 200 கிராம் தங்கத்தை கடனாக மத்திய அரசு அளித்தது. அதை நாடு முழுவதும் விரிவுபடுத்தி பொற்கொல்லர் வாழ்க்கையை திருப்பித் தரவேண்டும் என்றார் உமாபதி.
ஒரு கிலோ சயனைட் ரூ.1500
ஒரு கிலோ சயனைட் ஏறக்குறைய 1500 ரூபாய்க்கு பொற்கொல்லர்களுக்கு விற்கப்படுகிறது. வெளிநபர்கள் இதை வாங்க முடியாது. அதேபோல் தொழிலைவிட்டுப் போனவர்களுக்கும் இது தரப்படுவதில்லை. யார், யார் தற்போது தொழிலில் உள்ளனர் என்பது சயனைட் விற்பனையாளர்களுக்கு நன்கு தெரியும். 33 கிராம் எடை கொண்ட 30 கட்டிகளாக விற்கப்படுகிறது. ஒரு கட்டி விலை ரூ. 40. 20 மில்லி கிராம் சயனைட் ஒருவர் உயிரிழக்கப் போதுமானது. சயனைட் சாப்பிட்டு இறந்தோரின் உடல் சில்வர் கோட்டிங் அடித்ததுபோன்று காணப்படும் என பொற்கொல்லர்கள் தெரிவித்தனர்.