அரசின் மெத்தனத்தால் உயர்ந்து வரும் ஆட்டோ கட்டணம்: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவுகள்

அரசின் மெத்தனத்தால் உயர்ந்து வரும் ஆட்டோ கட்டணம்: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவுகள்
Updated on
2 min read

நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத் தில் கடந்த 2013-ல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் முறையாக அமல் படுத்தப்படாததால், ஆட்டோ கட்டணம் பலமடங்கு உயர்ந் துள்ளது. விரைவில் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்டோ கட்ட ணத்தை முறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டதன் காரணமாக, கடந்த 2013-ல் ஆட் டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளி யிடப்பட்டது. அதன்படி 1.8 கிமீ தூரத்துக்கு குறைந்தபட்ச கட்ட ணமாக ரூ.25-ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டது. நள்ளிரவு நேரத்தில் 50 சதவீதம் கூடுதலாக வசூலித்துக் கொள்ளவும், காத்திருக்கும் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.3.50-ம், ஒரு மணி நேரத்துக்கு காத்திருப்பு கட்டணமாக ரூ.42-ம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அரசின் இந்த உத்த ரவை பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிப்பதில்லை. மீட்டர் இருந்தும் அதைப் போடாமல் இஷ்டத்துக்கு கட்டணம் வசூ லிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் அமைப்பின் செயலாளரான லோகு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஏ. எட்வின் பிரபாகர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஏற்கெனவே 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் அரசின் கோரிக்கையை ஏற்று, தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையின் அடிப்படையில் கட்டணத்தை திருத்தியமைக்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த எந்த கட்டளையையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகி றார்கள். எனவே புதிய கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்து அரசு அதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

இதுபற்றி ஆட்டோ தொழிற்சங் கத்தினர் கூறும்போது, “ஆட்டோக்களுக்கு இலவச டிஜிட்டல் மீட்டர் வழங்குவதாக அரசு உறுதியளித்து 3 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கவில்லை. புதுச்சேரியில் 1.8 கிமீ தூரத்துக்கு ரூ. 35 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே நிர்ணயம் செய்த ரூ. 25 என்ற குறைந்தபட்ச கட்டணம் எங்களுக்கு கட்டுபடியாகாது. 1.8 கிமீ தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 வரை நிர்ண யம் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. புதிய கட்ட ணத்தை நிர்ணயிக்கும் முன்பாக கட்டாயம் தமிழக அரசு எங்க ளையும் அழைத்துப் பேச வேண்டும்” என்றனர்.

எல்காட் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகம் முழவதும் சுமார் 2.50 லட்சம் ஆட்டோக்களும், சென்னையில் சுமார் 96 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றன. ஆட் டோக்களில் ஜிபிஎஸ், பிரிண்டர் மற்றும் எமர்ஜென்சி பட்டன் வசதியுடன் டிஜிட்டல் மீட்டர் பொருத்த ஏற்கெனவே டெல்லி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப் பட்டு, அதற்கான கோப்புகள் தலைமைச் செயலகத்தில் 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

இதற்காக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.88.45 கோடி ஒதுக்கப்பட்டு இலவசமாக ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போதுள்ள அரசியல் சூழலில் இனிமேல் டெண்டர் கோரினாலும் ஜிபிஎஸ் வசதி யுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் தமிழகத்துக்கு 2018-ல்தான் சாத்தி யமாகும்’’ என்றார்.

எட்வின் பிரபாகர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in