

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில், போலியான மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் ஓய்வூதியம் பெற்ற ஏழு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில், முதியோர்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், உழவர் பாதுகாப்புத் திட்டத்திலுள்ள ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 35 லட்சத்து 38 ஆயிரத்து 576 பேர் அங்கீகரிக்கப்பட்டு, ஓய்வூதியம் பெற்று வந்தனர்.
இத்திட்டத்தில் இந்திராகாந்தி பெயரிலான தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் மற்றும் விதவைகள் ஓய்வூதியத்துக்காக மத்திய அரசின் சார்பில் முறையே, மாதந்தோறும் 60 முதல் 79 வயதினருக்கு தலா ரூ.200, 80 வயதுக்கு மேலானோருக்கு ரூ.500, மாற்றுத் திறனாளிகளில் 79 வயது வரையிலானோருக்கு ரூ.300 மற்றும் விதவைகளுக்கு 79 வயது வரை ரூ.300 என நிதி வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.ஆனால், இத்திட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்தி பென்ஷன் பெறுவதாகத் தமிழக அரசுக்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக சமூகநலத்துறை மற்றும் வருவாய் நிர்வாகத் துறை இணைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் கணக்கெடுப்பு மேற்கொண்டது. இதில், தற்போது ஏழு லட்சம் போலி பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மொத்தமுள்ள பயனாளிகள் பட்டியலை வீடு, வீடாக ஆய்வு செய்ததில், ஏழு லட்சம் ஓய்வூதியதாரர்கள் போலியாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் வாங்குவது தெரிய வந்துள்ளது. இதையொட்டி, போலியானவர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்துக்கு மேல் போலி இருக்கும் எனத் தெரிகிறது. அதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. வரும் ஜனவரிக்குள் முழுமையாக ஆய்வு செய்து, பின்னர் போலிகளை நீக்கி, தகுதியான அனைவருக்கும் வங்கிகள் மற்றும் அஞ்சலகம் மூலம் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நடவடிக்கை மூலம், தமிழக அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.70 கோடி வரை நிதி இழப்பு குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.