

மண்ணெண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 0.25 காசு வீதம் இம்மாதம் முதல் தேதியிலிருந்து உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், விலை உயர்வை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஒவ்வொரு மாதத்திற்கு 25 காசு வீதம் 10 மாதம் காலத்திற்கு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட மத்திய அரசு வழி வகை செய்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இவற்றிற்கான விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது.
தற்போது மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியதன் மூலம் ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கோடிக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் மண்ணெண்ணெய் மூலம் தான் தங்களின் வீடுகளில் சிமிழி விளக்கைக் கொண்டு இரவுப் பொழுதை கழித்து வருகின்றனர்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாண்டு காலத்தில், தங்களை ஆட்சி அதிகாரத்தில் அமரச் செய்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளி வர்க்கத்தினருக்கும் விசுவாசமான ஆட்சியாக நடந்து வருகின்றது.அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக வரிச் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது.
நாட்டு மக்களுக்கு சொந்தமான தேசவுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.13லட்சம் கோடியை கடனாக வாரி வழங்கி, அவைகளை திரும்பப் பெறாமல் வராக்கடன் பட்டியலை பெருக்கிக் கொண்டே செல்வதுடன் அவைகளை தள்ளுபடியும் செய்கின்றது. அதே நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சிறிதளவு மானியம் வழங்கும் காரணத்தால், தேசத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாகக் கூறி, மானியங்களை படிப்படியாக குறைத்து வருகின்றது.
ஏழை,எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மண்ணெண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. எளிய மக்களின் வீடுகளில் எரிந்து கொண்டிருக்கும் சிமிழி விளக்கையும் அனைத்து விட மத்திய அரசு முயல்வது கண்டனத்திற்குரியதாகும்.
ஜூலை முதல் ஏப்ரல் வரையிலான பத்து மாத காலத்தில் ரூ 760 கோடியை மக்கள் தலையில் சுமத்திட மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செயலாகும். மக்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.