Published : 19 Jun 2017 10:22 AM
Last Updated : 19 Jun 2017 10:22 AM

தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை மீட்பதற்கும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 136 விசைப்படகுகளை மீட்பதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திலும், மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டும் தமிழக மீனவர்களுக்கு ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் மே 29 ம் தேதி வரை 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் இந்த ஆண்டு முதல் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்கள் முடிந்து விட்ட நிலையில், கடந்த 15 ஆம் தேதி (15.06.2017) முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்கள் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மீண்டும் மீன்பிடிக்க ஆர்வத்தோடு கடலுக்குச் சென்றனர்.

கடந்த பல வருடங்களாக தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

மீனவர்களின் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு காண்பதற்காக இரு நாட்டு பிரதமர் மத்தியிலும், அமைச்சர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும், மீனவப் பிரதிநிதிகள் மத்தியிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றும் பயனில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து கொண்டே போகிறது. அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித்தடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே இலங்கைப் பிரதமர் இந்தியா வந்தபோதும், இந்தியப் பிரதமர் இலங்கை சென்ற போதும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை கடற்படையால் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் தெரிவித்தன.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்த ஒரு சில மாதத்திலேயே, அதுவும் மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்பிடிக்க முடியாமல், வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை அச்சுறுத்தி, சிறைப்பிடித்துச் சென்றிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

மீன்பிடித்தடைக்காலம் முடிந்த நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இச்சூழலில் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று முன் தினம் 17.06.2017 சனிக்கிழமை இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை 5 மீனவர்களை அச்சுறுத்தி, கைது செய்து, அவர்கள் சென்ற ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மீன்பிடித்தடைக்காலம் முடிந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு மீண்டும் இலங்கை கடற்படையால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியுற்று, மன வேதனையில் உள்ளார்கள்.

எனவே மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் இனிமேல் இது போன்ற அராஜகச் செயலில் இலங்கை கடற்படை ஈடுபடக்கூடாது என்பதை இலங்கை அரசுக்கு இந்திய அரசு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள 11 தமிழக மீனவர்கள் உள்பட நேற்று முன் தினம் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட 5 மீனவர்களையும் சேர்த்து மொத்தமுள்ள 16 மீனவர்களை மீட்பதற்கும் மற்றும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 136 விசைப்படகுகளை மீட்பதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய பா.ஜ.க அரசு எடுக்க வேண்டும்.

மேலும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையில் சுமூகத்தீர்வு காண்பதற்கு இனியும் காலதாமதம் செய்யாமல் தீர்க்கமான முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது"

இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x